தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்ற மவுலானா அபுல்கலாம் ஆசாத் கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து போட்டியில் பெங்களூரு மாவட்ட கால்பந்து கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
காயல்பட்டினம் ஐக்கிய விளை யாட்டு சங்கம் சார்பில் ஆண்டு தோறும் மவுலானா அபுல்கலாம் ஆசாத் நினைவு கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை பொன் விழா ஆண்டு அகில இந்திய கால்பந்து போட்டியாக நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க கால்பந்து மைதானத்தில் 18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 20 கால்பந்து அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. பெங்களூரு மாவட்ட கால்பந்து கழக அணி (பெங்களுரூ பிடிஎப்ஏ), சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணி (எம்எஸ்யூ) ஆகியவை மோதின.
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியின் ஆட்டநேரத்தில் இரு அணிகளும் கோலடிக்காததைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் பெங்களூரு மாவட்ட கால்பந்து கழக அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. அந்த அணியில் சுஜிகுமார், மணிவண்ணன், ஜான் பீட்டர் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு மவுலானா அபுல்கலாம் ஆசாத் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
மேலும், சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் மாலிக் பெரோஸ்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுழற்கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை காயல்பட்டினம் விளையாட்டு சங்க தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக்கு லெப்பை, செயலாளர் பி.எஸ்.எம்.இலியாஸ், துணைச் செயலாளர் எஸ்.எம்.ரபீக், பொருளாளர்கள் எம்.எல்.ஹாருன் ரசீத், ஏ.எச்.செய்யது உமர், விளையாட்டு குழு தலைவர் எஸ்.எம்.உசைர், செயலாளர் பி.எஸ்.அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.