டன்கன் பிளெட்சருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வரும் நிலையில் சவுரவ் கங்குலி பயிற்சியாளராக சுனில் கவாஸ்கர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
வரும் தொடர்களை இந்தியா தன் சொந்த மண்ணில் ஆடுவதால் இந்திய அணியின் பயிற்சியாளராக இதுவே சிறந்த தருணம். கங்குலிக்கு கால அவகாசம் இருந்தால் ஏதோ ஒரு விதத்தில் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராகவோ அல்லது அணியின் இயக்குநராகவோ பொறுப்பேற்கலாம்.
கங்குலி பயிற்சியாளரானால் வேறு பயிற்சியாளர்கள் தேவை இல்லை” என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அணி இயக்குநராக ரவிசாஸ்திரிக்குப் பதில் கங்குலி வங்கதேசத் தொடருக்குச் செல்லலாம் என்றும், ஜஸ்டின் லாங்கர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக வாய்ப்பிருப்பதாகவும் ஒரு சில கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இது குறித்து கங்குலி தரப்பிலிருந்து எந்த வித கருத்தும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.