விளையாட்டு

ரியோ ஒலிம்பிக்: அபினவ் பிந்த்ரா தகுதி

பிடிஐ

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்தரா அடுத்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

ஜெர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் 6-வது இடத்தைப் பிடித்ததன் மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் பிந்த்ரா.

ஒலிம்பிக் போட்டியின் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்தியரான பிந்த்ரா, மூனிச் போட்டியில் 627.5 புள்ளிகளைப் பெற்றதன் மூலம் அவருடைய ஒலிம்பிக் வாய்ப்பு உறுதியானது.

இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள 4-வது நபர் பிந்த்ரா ஆவார். ககன் நரங், ஜிது ராய், அபூர்வி சண்டீலா ஆகியோர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற மற்ற இந்தியர்கள்.

தொடர்ந்து 5-வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கிறார் பிந்த்ரா. அது தொடர்பாக பேசிய தேசிய துப்பாக்கி சுடுதல் சங்க தலைவர் ரணிந்தர் சிங், “அபினவ் பிந்த்ரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவாரா என்ற சந்தேகம் ஒருபோதும் எழுந்ததில்லை. அவர் விரைவாகவோ அல்லது கொஞ்சம் தாமதமாகவோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிடுவார் என்பதில் உறுதியாக இருந்தோம்” என்றார்.

2008-ல் சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT