மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே சாம்பியன் பட்டம் வென்றார். களிமண் ஆடுகளத்தில் அவர் வென்ற முதல் மாஸ்டர்ஸ் பட்டம் இது.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முர்ரே 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வீழ்த்தினார். கடந்த வாரம் நடைபெற்ற மூனிச் ஓபனில் வென்றதன் மூலம் களிமண் ஆடுகளத்தில் முதல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய முர்ரே, இப்போது நடப்பு சாம்பியனும், களிமண் ஆடுகளத்தின் முடிசூடா மன்னனுமான நடாலை அவருடைய சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருக்கிறார்.
இதற்கு முன்னர் களிமண் ஆடுகளத் தில் 6 முறை நடாலை சந்தித்திருந்த முர்ரே அவையனைத்திலும் தோல்வி கண்டிருந்த நிலையில், 7-வது முயற்சியில் வாகை சூடியிருக்கிறார்.
வெற்றி குறித்துப் பேசிய முர்ரே, “ஸ்பெயினில் நடாலுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினமான தாகும். களிமண் ஆடுகளத்தில் நடாலுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற முயற்சிப்பதும், வெற்றி பெறுவதும் மிகவும் கடினமானது. அதனாலேயே இதுபோன்ற போட்டிகளில் நாங்கள் விளையாடுகிறோம். அடுத்ததாக நடைபெறவுள்ள பிரெஞ்சு ஓபன் போட்டியிலும் இதேபோன்று விளையாடுவதற்கு முயற்சிப்பேன்” என்றார்.
இந்த சீசனில் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ், பார்சிலோனா ஓபன், இப்போது மாட்ரிட் ஓபன் என தொடர்ச்சியாக களிமண் ஆடுகளங் களில் தோற்றுள்ள நடால், தோல்வி குறித்து கூறியதாவது: நான் எதிர் பார்த்த அளவுக்கோ அல்லது நம்பிய அளவுக்கோ இறுதி ஆட்டம் அமைய வில்லை. நான் கடைசி வரை போராடி னேன். ஆனாலும் நினைவுகூரக்கூடிய நாளாக இந்த நாள் அமையவில்லை” என்றார்.
போபண்ணா ஜோடி சாம்பியன்
மாட்ரிட் ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ருமேனியாவின் ஃபுளோரின் மெர்ஜியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த சீசனில் 3-வது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள போபண்ணா, தனது புதிய இணையான மெர்ஜியாவுடன் இணைந்து முதல் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார். இந்த ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் 6-2, 6-7 (5), 11-9 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த செர்பியாவின் நீனாட் ஜிமோன்ஜிக்-போலந்தின் மார்ஸின் மடோவ்ஸ்கி ஜோடியை வீழ்த்தியது.
முன்னதாக கனடாவின் டேனியல் நெஸ்டருடன் இணைந்து விளையாடிய போபண்ணா, சிட்னி, துபாய் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
18-வது இடத்தில் குஸ்நெட்சோவா
மாட்ரிட் ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியதன் மூலம் டபிள்யூடிஏ தரவரிசையில் முதல் இருபது இடங்களுக்குள் முன்னேறினார் ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா.
2004 அமெரிக்க ஓபன், 2009 பிரெஞ்சு ஓபன் என இரு கிராண்ட்ஸ்லாம் போட்டி களில் சாம்பியன் பட்டம் வென்றவரான குஸ்நெட்சோவா, மாட்ரிட் ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியதால் 11 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தைப் பிடித்துள்ளார். 2009-க்குப் பிறகு ஸ்வெட்லானா விளையாடிய முதல் இறுதிப் போட்டி மாட்ரிட் ஓபன்தான்.
அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 10,156 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், ருமேனியா வின் சைமோனா ஹேலப் 7,115 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6,915 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், செக்.குடியரசின் பெட்ரோ விட்டோவா 6,670 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.
மாட்ரிட் ஓபனில் ஆரம்ப கட்ட சுற்றோடு வெளியேறிய போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா தரவரிசையில் முதல் 10 இடங்களை இழந்துள்ளார். தற்போது அவர் 13-வது இடத்தில் உள்ளார். ஜெர்மனியின் ஆண்ட்ரியா பெட்கோவிக் ஓர் இடம் முன்னேறி 9-வது இடத்தையும், ஸ்பெயினின் கார்லா சுவாரெஸ் இரு இடம் முன்னேறி 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக தரவரிசையில் நடாலுக்கு பின்னடைவு
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் தோல்வி கண்ட நடால், தற்போது ஏடிபி தரவரிசையில் சறுக்கியுள்ளார். அவர் 3 இடங்களை இழந்து 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக முதல் 5 இடங்களுக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளார்.
செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மாட்ரிட் ஓபனில் பங்கேற்காதபோதும் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 2-வது இடத்திலும், முர்ரே 3-வது இடத்திலும் உள்ளனர்.
கனடாவின் மிலஸ் ரயோனிச், செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் ஆகியோர் தலா இரு இடங்கள் முன்னேற்றம் கண்டு முறையே 4 மற்றும் 5-வது இடங்களை பிடித்துள்ளனர். அதேநேரத்தில் ஜப்பானின் நிஷிகோரி ஓர் இடத்தை இழந்து 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.