விளையாட்டு

கோவில்பட்டி அகில இந்திய ஹாக்கி: போபால், ஜலந்தர் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டி யில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டங் களில் போபால் எம்.பி.ஹெச்.ஏ. லெவன் மற்றும் ஜலந்தர் பி.எஸ்.எப். அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.

கே.ஆர். கல்வி நிறுவனங்கள் சார்பில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 7-வது அகில இந்திய ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. 9- வது நாளான நேற்று மாலை நடந்த 3-வது காலிறுதி போட்டியில் போபால் எம்.பி.ஹெச்.ஏ. லெவன் அணி 5-0 என்ற கோல் கணக்கில் சண்டீகர் சி.ஐ.எஸ்.எப். அணியை வென்றது.

ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய போபால் அணி தரப்பில் 5-வது நிமிடத்தில் அர்ஜூன் சர்மாவும், 43-வது மற்றும் 48-வது நிமிடங்களில் தருண் அதிகாரியும், 50-வது நிமிடத்தில் ரிங்கு யாதவும், 66-வது நிமிடத்தில் விகாஸ் சவுத்ரியும் கோலடித்தனர்.

ஐசிஎப் தோல்வி

தொடர்ந்து நடந்த 4-வது காலிறுதி ஆட்டத்தில் ஜலந்தர் பி.எஸ்.எப். அணி 5- 4 என்ற கோல் கணக்கில் சென்னை ஐ.சி.எப். அணியை தோற்கடித்தது. 8-வது நிமிடத்தில் ஐ.சி.எப். அணி வீரர் ரகு, பீல்டு கோல் மூலம் கோல் கணக்கை தொடங்கினார். 18-வது நிமிடத்தில் ஜலந்தர் பி.எஸ்.எப். அணி வீரர் ரஞ்சித் சிங் ஒரு பீல்டு கோல் போட்டு அதனை சமன் செய்தார்.

பின்னர் இரு அணியாலும் இறுதி வரை கோல் போட முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில் ஜலந்தர் பி.எஸ்.எப். அணி வீரர்கள் 4 கோல்களும், சென்னை ஐ.சி.எப் அணி வீரர்கள் 3 கோல்களும் அடித்தனர்.

இன்று அரையிறுதி

இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் சென்னை வருமான வரித்துறை அணியும், பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதுகின்றன. தொடர்ந்து 4.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் போபால் எம்.பி.ஹெச்.ஏ. லெவன் அணியும், ஜலந்தர் பி.எஸ்.எப். அணியும் மோதுகின்றன.

SCROLL FOR NEXT