விளையாட்டு

ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவும் தங்கத்துக்கு உருகும் மில்கா சிங்கும்!

செய்திப்பிரிவு

நான் கண் மூடுவதற்குள் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியா தங்கம் வெல்வதை பார்க்க விரும்புகிறேன்: மில்கா சிங்

*

இந்தியாவின் மூத்த தடகள வீரர் மில்கா சிங், தான் இறப்பதற்குள் ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வதைப் பார்க்க வேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் மாணவர்களுக்கான விளையாட்டுத்துறைக் கல்வியில் அறிவியல் ரீதியான அணுகுமுறையை புகுத்தும் 'மில்கா ஷ்யுர் ஃபிட்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்.

இந்த ஆண்டு டெல்லியில் இது செயல்படத் தொடங்கும் என்றும், விரைவில் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இந்த திட்டம் பரவலாக்கப்படும் என்றும் மில்கா சிங் தெரிவித்துள்ளார்.

‘நான் இறப்பதற்குள் ஒலிம்பிக் தடகளத்தில் இந்திய வீரர் ஒருவர் தங்கம் வெல்ல வேண்டும் என்ற ஆசையே இத்திட்டத்துக்கான காரணம்’ என்று இந்தியாவில் உருவான சிறந்த தடகள வீரர் மில்கா சிங் தெரிவித்தார்.

ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வெல்வது என்பதற்கு 3 விஷயங்கள் மிக முக்கியமானது:

1. வெற்றியை நோக்கிய தீராத அவா கொண்ட இளம் தடகள வீரர்கள்

2. நல்ல பயிற்சிமுறையைக் கைவசம் வைத்துள்ள பயிற்சியாளர்.

3. நாட்டில் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்காக பாடுபடும் அதிகாரிகள்.

இந்த மூன்றும் மிக முக்கியமானது என்கிறார் மில்கா சிங்.

நாட்டில் நிறைய திறமைகள் உள்ளன, இவர்களுக்கு நல்ல அறிவியல் முறையிலான பயிற்சியும் வழிகாட்டுதலும் மிக முக்கியம் என்று கூறிய மில்கா சிங், வாழ்க்கையில் தான் 3 முறை கண்ணீர் விட்டு அழுததாகத் தெரிவித்தார்.

பிரிவினை கலவரங்களின் போது தன் கண் முன்னாலேயே தனது குடும்பத்தினர் கொல்லப்பட்டபோதும், 1960-ம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ரோமில் நடைபெற்ற போது 400மீ தடகள இறுதிப் போட்டியில் தோல்வி தழுவிய போதும், ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா தனது வாழ்க்கையை 'பாக் மில்கா பாக்' என்ற தலைப்பில் எடுத்த படத்தை பார்த்த போதும் தான் அழுததாக மில்கா குறிப்பிட்டார்.

இந்தப் படம்தான் இளம் தலைமுறையினரிடையே தன்னை பிரபலமாக்கியது என்று கூறினார் மில்கா சிங்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள அகாடமியில் 4 வயது முதல் 17 வயது வரையிலான திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை வளர்த்தெடுப்பதாகும்.

SCROLL FOR NEXT