நடப்பு ஐபிஎல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக துவக்க வீரராக களமிறங்கி மிகச ்சிறப்பாக ஆடிவரும் ராபின் உத்தப்பா, இந்தியாவின் துவக்க வீரர் பிரச்சினைக்கு தானே சரியான தீர்வு என்று கூறியுள்ளார்.
தனது உத்திகளில் பயிற்சியாளர் பிரவீண் ஆம்ரே சில திருத்தங்களைச் செய்து கொடுத்தது தனது ஆட்டத்தை வேறு மட்டத்திற்கு உயர்த்தியுள்ளது என்று கூறினார் அவர்.
"நான் பேட்டிங் செய்யும் போது பந்து வீச்சை எதிர்கொள்ளும் முன்பு சில நகர்வுகளை மேம்படுத்தினேன், இதனால் எனது ஷாட் தேர்வு சரியாக அமைந்துள்ளது. மேலும் நான் கால்களை நகர்த்துவதிலும் சில மாற்றங்களைச் செய்துள்ளேன்.
எனது ஆட்டத்தில் பிரவீண் ஆம்ரேயின் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் தாக்கம் செலுத்தி வருகிறது. நிறைய மாற்றங்களைச் செய்துள்ளேன் இதனால் நிறைய ரன்கள் எடுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. விளைவுகளை அனைவரும் இப்போது பார்த்து வருகிறீர்கள்.
இந்தியாவுக்காக நான் பங்களிப்பு செய்யாதது வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்ற தாகம் இன்னும் அதிகமாகவே உள்ளது. எனக்காக எனது ஆட்டம் பேசும் என்றே கருதுகிறேன்.
நம் அணி எதிர்பார்க்கும் துவக்க வீரர் நானாகவே இருப்பேன் என்று கருதுகிறேன். இந்திய அணிக்காக எதிர்காலத்தில் நிறைய பங்களிப்பு செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார் ராபின் உத்தப்பா.
நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் 302 ரன்கள் எடுத்து, இந்திய வீரர்களில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சிறப்பை ராபின் உத்தப்பா பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.