குல்னாவில் நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் மொகமது ஹபீஸ் 224 ரன்கள் விளாச, பாகிஸ்தான் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 537 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசத்தைக் காட்டிலும் 205 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தான் அணியில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் சர்பராஸ் அகமட் 51 ரன்களுடனும், ஆசாத் ஷபிக் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
227/1 என்று தொடங்கிய பாகிஸ்தான் இன்று மட்டும் 310 ரன்களை எடுத்துள்ளது. இதற்கு முன்னர் இருமுறை இரட்டை சதத்துக்கு அருகே வந்து ஆட்டமிழந்துள்ளார் ஹபீஸ். அவர் 332 பந்துகளைச் சந்தித்து 23 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 224 ரன்கள் எடுத்து ஷுவகதா ஹோம் பந்தில் அவுட் ஆகும் போதே பாகிஸ்தான் 80 ரன்கள் முன்னிலை பெற்றுவிட்டது. அதன் பிறகு மிஸ்பா, ஆசாத் ஷபிக் மற்றும் சர்பராஸ் அகமது ஆகியோரின் அரைசதங்கள் மூலம் முன்னிலையை 200 ரன்களுக்கும் மேல் கொண்டு சென்றது பாகிஸ்தான்.
வங்கதேச பந்துவீச்சு இந்த மந்தமான பிட்சில் வேலைக்கு ஆகவில்லை. பவுண்டரி பந்துகள் அதிகமாக வீசப்பட்டன. குறிப்பாக ஷாகிப் அல் ஹசன் 122 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்றவில்லை. பந்துகள் திரும்பாமல் அடம்பிடித்தன.
அசார் அலியுடன் (83) இணைந்து, ஹபீஸ் 227 ரன்களைச் சேர்த்தார். அதன் பிறகு இரண்டு அரைசதக் கூட்டணி, ஒன்று யூனிஸ் கானுடன், மற்றொன்று மிஸ்பாவுடன். அசார் அலியும் சதம் எடுத்திருக்க வேண்டும், ஆனால் அவர் ஷுவகதா ஹோமின் ஆஃப் ஸ்பின் பந்து ஒன்று வேகமாக வர மிடில் ஸ்டம்ப் தொந்தரவு ஆனது.
யூனிஸ் கான் தொடக்கத்தில் ரூபல் ஹுசைனின் அவுட் ஸ்விங்கருக்கு சற்றே ஆட்டம் கண்டார். ஆனால் அதன் பிறகு அவர் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து தைஜுல் இஸ்லாம் பந்தில் பவுல்டு ஆனார். இந்த பந்து திரும்பியது. பிறகு ஹபீஸ் 224 ரன்களில் ஷுவகதா ஹோம் பந்தில் அவுட் ஆனார். மிஸ்பா உல் ஹக் இறங்கியவுடனேயே சிக்ஸ் அடித்து ஆக்ரோஷம் காட்டினார். புல் ஷாட்கள், ரிவர்ஸ் ஸ்வீப் என்று ஆதிக்கம் செலுத்தி 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்து ஆடிவந்த போது தைஜுல் இஸ்லாம் பந்தை ஸ்வீப் செய்ய டாப் எட்ஜ் எடுத்து நேராக ரூபலிடம் கேட்ச் ஆனது.
மிஸ்பா அவுட் ஆகும் போது ஸ்கோர் 468/4 என்று இருந்தது, அதன் பிறகு சர்பராஸ் அகமட் 54 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 51 ரன்கள் விளாசினார். ஆசாத் ஷபிக்கும் 51 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.