டெல்லி டேர் டெவில்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங்கை ரூ.16 கோடி விலை கொடுத்து வாங்கியது. ஆனால் தனக்கும் அந்த விலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்.
ரூ.16 கோடி அவர் ஆட்டத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த யுவராஜ், “உண்மையில் இல்லை என்றே கூறுவேன். ஏலம் நடைபெறும் போது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். எனக்கு இவ்வளவு தொகை கொடுங்கள் என்று நான் யாரிடமும் கூறவில்லை. என்ன தொகைக்கு ஏலம் எடுத்திருந்தாலும் நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடியிருப்பேன்.
இப்போதைக்கு இந்த கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் ஆடி வருகிறேன், நான் தொலைதூரம் சிந்திப்பதில்லை. ஒரு அணியாக டேர் டெவில்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்ப வேண்டும். 11 தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்றது மிக முக்கியம்.
எனக்கும் கேரி கர்ஸ்டனுக்கும் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது எப்படி இருந்ததோ அப்படியே நீடிக்கிறது. எங்களிடையே நல்ல புரிதல் உள்ளது. என்னிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணர்வதைல் கேரி கர்ஸ்டனின் பங்கு மிக அதிகம்.
இந்தியாவுக்கு பயிற்சி அளிக்கும் போது அவர் 16 வீரர்களை கையாண்டால் போதும் ஆனால் டெல்லி அணிக்காக அவர் 25 வீரர்களைக் கையாள வேண்டியுள்ளது.” இவ்வாறு கூறியுள்ளார் யுவராஜ்.