புதுடெல்லி: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வம்சாவளி வீரர்கள் பலர் பல்வேறு அணிகளின் சார்பில் பங்கேற்கவுள்ளனர். அதிகபட்சமாக கனடா அணியில் 11 இந்திய வம்சாவளி வீரர்களும், அமெரிக்காவில் 9 பேரும், ஓமனில் 7 பேரும், ஐக்கிய அரபு அணியில் 7 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
இதுதவிர நியூஸிலாந்து அணியில் இருவரும், தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய அணிகளில் தலா ஒரு இந்திய வம்சாவளி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த வகையில் மொத்தம் 40 இந்திய வம்சாவளி வீரர்கள் டி 20 உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளனர்.
முக்கிய இந்திய வம்சாவளி வீரர்கள் குறித்த விவரம்:
சவுரவ் நேத்ரவாக்கர்: மும்பையைச் சேர்ந்த சவுரவ் நேத்ரவாக்கர், அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார். வரும் 7-ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணிக்கெதிராக களமிறங்குகிறார் சவுரவ் நேத்ரவாக்கர்.
24 வயதான சவுரவ் நேத்ரவாக்கர், அமெரிக்க அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருக்கிறார். 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் இன்ஜினீயரான இவர், 2024-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வீழ்த்தினார். இதன்மூலம் சூப்பர்-8 சுற்றுக்கு அமெரிக்க அணி சென்றது.
சவுரவ் நேத்ரவாக்கர் கூறும்போது, “இந்தியாவுக்கு வந்து தாயக அணிக்கெதிராக விளையாடுவதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இது ஒரு உணர்ச்சிகரமான தருணம். நான் மும்பையில்தான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். பின்னர் விளையாட்டை கைவிட்டுவிட்டு அமெரிக்கா சென்றேன்.
ஆனால், அங்கு சென்ற பின்னர் மீண்டும் கிரிக்கெட்டில் இணைவேன் என்று எதிர்பார்க்கவில்லை. மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது குறித்து நினைத்துப் பார்க்கவே இல்லை” என்றார். மோனங்க் பட்டேல்: அமெரிக்க அணியின் கேப்டனாக இருக்கும் மோனங்க் படேல், இந்தியாவிலுள்ள ஆனந்த் பகுதியைச் சேர்ந்தவர்.
இவர் குஜராத்தின் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடியபோது அவருடன் இணைந்து பந்துவீசியவர் இந்திய அணியின் பந்துவீச்சு நட்சத்திரம் ஜஸ்பிரீத் பும்ரா. தற்போது இந்திய அணிக்கெதிராகவே விளையாட வந்துள்ளார் மோனங்க்.
இதுகுறித்து மோனங்க் கூறும்போது, “சிவப்பு பந்துகளிலும், வெள்ளைப் பந்துகளிலும் நாங்கள் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். அந்தக் காலம் சிறப்பான காலம் என்று சொல்வேன். அப்போது ஜஸ்பிரீத் பும்ராவுடன் இணைந்து விளையாடி இருக்கிறேன். அப்போதே கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிப்போம் என்று நான் தெரிந்து வைத்திருந்தேன்” என்றார்.
ஜஸ்பிரீத் சிங்: பஞ்சாபைச் சேர்ந்தவர் ஜஸ்பிரீத் சிங். இவர் இத்தாலி அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்பிரீத் சிங், இளம்வயதிலேயே இந்தியாவை விட்டுச் சென்றுவிட்டார். இந்தியாவிலுள்ள பக்வாரா பகுதியைச் சேர்ந்தவர். 32 வயதாகும் ஜஸ்பிரீத் சிங், 2006-ல் இந்தியாவிலிருந்து இத்தாலியின் மிலன் நகருக்கு தனது குடும்பத்தாருடன் சென்றுவிட்டார். 2016-17-ல் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி, சர்வதேச போட்டிகளில் 2019-ல் ஜஸ்பிரித் சிங் அறிமுகமானார்.
ஆர்யன் தத்: பஞ்சாபைச் சேர்ந்த ஆர்யன் தத், தற்போது நெதர்லாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். 2023-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணிக்காக பங்கேற்றார். 22 வய தான இவர் பிறந்தது நெதர்லாந்தின்தான். 1980-களிலேயே இவரது குடும்பம் பஞ்சாபிலிருந்து நெதர்லாந்துக்குச் சென்றுவிட்டது. இவரது நெருங்கிய உறவினர்கள் டெல்லியிலும், பஞ்சாபிலும் உள்ளனர்.
தில்பிரீத் பாஜ்வா: பஞ்சாபின் குர்தாஸ்பூரைச் சேர்ந்தவ் தில்பிரீத் பாஜ்வா. 2020-ம் ஆண்டில் பஞ்சாபிலிருந்து கனடாவுக்குச் சென்றுவிட்டார். கனடா அணியின் கேப்டனாக இவர் இப்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். பஞ்சாபில் இருந்தபோது உள்ளூர் அணிகளுக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி20 லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று திறமையை வளர்த்து எடுத்துள்ளார்.23 வயதாகும் தில்பிரீத், 2024-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும் கனடா அணிக்காக விளையாடினார்.
தில்பிரீத் பாஜ்வா
ஜதிந்தர் சிங்: லூதியானாவைச் சேர்ந்தவர் ஜதிந்தர் சிங், 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை விட்டுச் சென்றுவிட்டார். 36 வயதான இவர் ஓமன் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஓமன் அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி உள்ளார். ஓமன் அணி பங்கேற்கும் லீக் போட்டிகள் அனைத்தும் இலங்கையில்தான் நடைபெறவுள்ளன. லீக் போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினால் சொந்த நாட்டில் விளையாட அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும்.