விளையாட்டு

முதல் டெஸ்ட்: முதல் நாளில் வங்கதேசம் 236/4

செய்திப்பிரிவு

குல்னாவில் இன்று தொடங்கிய பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது.

பேட்டிங் சாதக ஆட்டக்களத்தில் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் டாஸில் தோற்றார். சயீத் அஜ்மல் உட்கார வைக்கப்பட்டார். ஆட்டம் தொடங்கி தேநீர் இடைவேளை வரை பாகிஸ்தான் 5 கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டது.

தமிம் இக்பால் 16 ரன்களில் இருந்த போது லெக் ஸ்லிப்பில் தாழ்வாக வந்த கேட்சை மொகமது ஹபீஸ் தவறவிட்டார்.

இம்ருல் கயேஸ் தூக்கி அடித்த ஷாட்டை கேட்ச் பிடிப்பதில் தவறாக கணித்து தவறவிட்டார் யாசிர் ஷா. இதே இம்ருல் கயேஸுக்கு ஷார்ட் லெக் பகுதியில் அசார் அலி ஒரு திடீர் கேட்சை தவற விட்டார்.

இன்று வங்கதேச வீரர் மொமினுல் ஹக் 80 ரன்கள் எடுத்து கடைசியாக இன்றைய முடிவு நேரத்தில் அவுட் ஆனார். ஆனால் அவர் 17 ரன்களில் இருந்த போது இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுல்பிகர் பாபர் தன் சொந்தப் பந்துவீச்சில் தன்னிடம் வந்த கேட்சையே தவறவிட்டார்.

பிறகு மஹமுதுல்லா (49) எட்ஜ் செய்த பந்தை மொகமது ஹபீஸும், யூனிஸ் கானும் வேடிக்கைப் பார்த்தனர்.

தமிம் இக்பால் 25 ரன்களில் யாசிர் ஷா பந்தில் அசார் அலியிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். மட்டையான பிட்சில் தமிம் இக்பாலும், இம்ருல் கயேஸும் தொடக்கத்தில் பம்மினர். மிகவும் பயந்து பயந்து ஆடி ஓவருக்கு 2 ரன்களுக்கும் கீழ்தான் ரன் விகிதமே இருந்தது. முதல் 2 மணி நேரங்களில் 4 பவுண்டரிகள் அடித்திருந்தால் அதிசயம் என்றே தெரிகிறது. உணவு இடைவேளையின் போது இம்ருல் கயேஸ் 104 பந்துகளில் 35 ரன்களுடன் இருந்தார்.

ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு தன்னம்பிக்கையுடன் ஆடி 51 ரன்கள் எடுத்து ஹபீஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மஹமுதுல்லா, மொமினுல் ஹக் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தனர். மஹமுதுல்லா கொஞ்சம் லாவகமாக ஆடினார், அவர் 49 ரன்கள் எடுத்து வஹாப் ரியாஸிடம் வீழ்ந்தார்.

மொமினுல் ஹக் 162 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்த நிலையில் 90-வது ஓவரின் 5-வது பந்தில் சுல்பிகர் பாபர் பந்தில் எல்.பி.ஆனார்.

ஆட்ட முடிவில் ஷாகிப் அல் ஹசன் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார். நாளை கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், சவுமியா சர்க்கார், ஆகியோர் களமிறங்குவர்.

SCROLL FOR NEXT