தவறான பந்து வீச்சு முறைக்காக பரிசோதனை மேற்கொள்ள பணிக்கப்பட்டிருந்த சுனில் நரைன், ஐபிஎல் தொடரில் வீச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பற்றி பேசிய கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர், ‘நரைன் நேராக வீசினாலும் அணியின் சொத்துதான் அவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
"கொல்கத்தா அணியின் ஒரு அங்கம் சுனில் நரைன். அவர் நேர் பந்துகளை மட்டுமே வீசினாலும் அவர் எங்கள் அணியின் சொத்து என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அவர் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அத்தகையது. அவருக்குப் பதிலாக வேறு ஒரு ஸ்பின்னர் வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நினைத்ததில்லை.
ஏனெனில் அவருக்கு மாற்று வீச்சாளர் கிடையாது. அவர் நேராக வீசினாலும் அதுவும் அணிக்கு நன்மையே. ஏனெனில் எதிரணியினரிடத்தில் அவர் ஏற்படுத்தியுள்ள பிம்பம் அத்தகையது.
அவர் தனது பந்து வீச்சு முறையை இவ்வளவு குறுகிய காலத்தில் சரி செய்து கொண்டு விடுவார் என்று நினைக்கவில்லை. அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
சுனில் நரைன் தரமான ஒரு வீரர், தரமான ஒரு தனி மனிதர், மேலும் கடின மனப்பாங்கு உடையவர். இப்படிப்பட்ட சோதனைக் காலக்கட்டங்களில் மனவலிமை மிக முக்கியம், அப்போதுதான் மீண்டும் சிறப்பாக வர முடியும். கடந்த காலங்களிலும் அவர் மனவலிமை மிக்கவர் என்பதை காட்டியுள்ளார்.
அதிகம் அறியப்படாத கே.சி.கரியப்பா மற்றும் குல்தீப் யாதவ் போன்ற வீரர்களை அணியில் எடுக்கும் காரணம் என்னவெனில் பிராட் ஹாக், சுனில் நரைன் ஆகியோருடன் இணைந்து விளையாட வைத்து அதன் மூலம் இந்திய அணிக்கு நல்ல ஸ்பின்னர்களை உருவாக்கித் தருவதே.
குல்தீப் யாதவ், கரியப்பா ஆகியோரை ஏதோ பேக்-அப் பவுலர்களாக தேர்வு செய்யவில்லை. இந்திய பிட்ச்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிற்பட்ட பகுதிகளில் நன்றாக திரும்பக்கூடியவை. எனவே இதுதான் உத்தி.
களத்தில் அனுபவமிக்க வீரர்களுடன் விளையாடுவதன் மூலம் நிறைய கற்றுக் கொள்ளலாம். மக்கள் எங்கள் அணியைப் பற்றி பேச வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்காக நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை காட்ட விரும்புகிறோம்.
கரியப்பா போட்டிகளில் பந்து வீசி நான் இதுவரை பார்த்ததில்லை. அவர் மேட்ச்- வின்னர் என்பதற்காக அவரை ஏலம் எடுக்கவில்லை. அவரை ஒரு நல்ல வீரராக இந்திய அணிக்காக வளர்த்தெடுக்க விரும்புகிறோம். நிச்சயம் இவருக்கு இந்த ஐபிஎல் தொடரில் பெரிய ஒரு பங்கு உள்ளது என்றே நான் கருதுகிறேன்”
இவ்வாறு கூறினார் கம்பீர்.