விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டின் மிகை வர்ணனைகள்!

ஆர்.முத்துக்குமார்

ஐபிஎல் கிரிக்கெட்டில் வர்ணனைகளை உற்று நோக்கினால், அதன் மிகைத் தன்மைகள் புரியவரும். அதாவது, அளவுக்கதிகமாக பாராட்டி வர்ணிப்பது தெளிவாகத் தெரியும்.

ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு ஒரு வீரரின் கடந்த கால ஃபார்ம், அவரது எதிர்கால ஃபார்ம் பற்றியெல்லாம் கவலையில்லை. மாறாக நிகழ்காலம்தான் முக்கியம்.

யுவ்ராஜ் சிங் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தடவு தடவென்று தடவி தோல்விக்கு இட்டுச் சென்றார்.

ஆனால், ஐபிஎல். கிரிக்கெட்டில் அது பற்றியெல்லாம் கவலையில்லை. அவர் வந்து நின்று முதல் பந்தை சாதாரணமாக மிட்விக்கெட்டில் தட்டி விட்டு ஒரு ரன் எடுத்தால்கூட 'ப்ரில்லியன்ட் ஷாட்' என்று வர்ணிப்பார்கள்.

மேலும், எப்போதும் பவுண்டரி அடித்தால் அது 'அபாரமான ஷாட்'தான். அது மோசமான பந்து என்ற கருத்தை வர்ணனையாளர்கள் கூறுவதில்லை.

அதே போல்தான் கெவின் பீட்டர்சன் ஆஷஸ் தொடரில் சரியாக விளையாடவில்லை. இதனால் இங்கிலாந்து கடுமையான தோல்வியை சந்தித்தது.

ஆனால் ஐபிஎல். கிரிக்கெட்டில் இவர் வந்தவுடன் ஒரு ரன் எடுத்து விட்டால் போதும் உடனே வர்ணனையாளர் இயன் பிஷப், 'கணக்கைத் துவங்க அற்புதமான ஷாட்டை ஆடினார் பீட்டர்சன்' என்று கூறுவார். ரமீஸ் ராஜாவோ இன்னும் ஒரு படிமேலே போய், 'அவர் சரியான பார்மில் உள்ளார்' என்பார். எதற்கு? ஒரு ரன்னிற்கு!

கேட்ச் கோட்டை விடப்பட்டால் அது மோசமான பீல்டிங் என்று கூறப்படமாட்டாது. மாறாக, பந்து வீச்சாளரின் துரதிர்ஷ்டம் அல்லது பேட்ஸ்மெனின் அதிர்ஷ்டம் என்று வர்ணிக்கப்படும்.

நடுவரின் கோளாறான தீர்ப்பு பற்றியும் அவ்வாறே இனிமையான வர்ணனைகளே வழங்கப்படும். விமர்சனம் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றே தெரிகிறது.

சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது வர்ணனையாளராக இயன் சாப்பல் பணியாற்றவேண்டும் என்று அவரை அணுகியுள்ளனர். ஆனால் விமர்சனம் செய்யக்கூடாது என்ற அன்புக் கட்டளையையும் அவருக்கு இட்டதாக கூறப்படுகிறது. கடைசியில் அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் வர்ணனைக்கு வரவில்லை.

இந்த பின்புலத்தில்தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் வர்ணனைகள் விமர்சனமற்ற இனிமையான மிகை வர்ணனையாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT