விளையாட்டு

சுழற்பந்து வீச்சாளர்கள் மீது தோனி அதிருப்தி

செய்திப்பிரிவு

விராட் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எளிதில் வென்றது. ஆனாலும் ஸ்பின் பந்து வீச்சு மீது சென்னை கேப்டன் தோனி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் ஒரு ஓவரில் அஸ்வின் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார். விராட் கோலி அவரை சாத்தினார். ஜடேஜா 4 ஓவர்களில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனையடுத்து தோனி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

ஆட்டம் முடிந்தவுடன் தோனி கூறியதாவது:

“இன்னும் சிறப்பாகக் கூட ஆடியிருக்க முடியும். ஆட்டத்தின் சில தருணங்களில் அணியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் சில தருணங்களில் ஆட்டம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

சுழற்பந்து வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த தொடரில் அவர்கள் சரியாக வீசவில்லை.

ஐபிஎல் தொடர் செல்லச் செல்ல பிட்ச்கள் மேலும் மந்தமடையும், எனவே ஸ்பின்னர்கள் தங்கள் பந்து வீச்சை மேம்படுத்துவது அவசியம். ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் அபாரம். ஒரு மூத்த வீரராக பவுலர்களிடம் அவர் ஆலோசனை வழங்குவார் என்பதற்காகவே அவரை மிட் ஆஃபில் நிறுத்தியுள்ளோம்.

டிவில்லியர்ஸ் ரன் அவுட் குறித்து..

அணியில் விரைவு கதியில் இயங்காத பீல்டர்கள் உள்ளனர். நாங்கள் பீல்டிங்கினால்தான் வளர்ந்து வருகிறோம். டிவில்லியர்ஸ் எங்கு விளையாடினாலும் சிறப்பாக விளையாடுவார். அவரை ரன் அவுட் செய்தால் அவர் விக்கெட் ஒரு எளிதான விக்கெட்” என்றார் தோனி.

துல்லியமற்ற த்ரோவை தோனி தனது சாதுரியத்தினால் ரன் அவுட் செய்து டிவில்லியர்ஸை வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT