ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒன்றுமில்லாமல் செய்து வெற்றி பெற்றது. இதனையடுத்து தனது பேட்டிங் பற்றி தோனி வருத்தம் தெரிவித்துள்ளார்.
65/4 என்று 10-வது ஓவரில் தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிராவோ (62) தோனி (31) ஆகியோர்தான் மீட்டு ஓரளவுக்கு கவுரவமான ரன் எண்ணிக்கையை எட்ட உதவினர். சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 157/2 என்று ஊதித் தள்ளியது.
தோனி 37 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
தனது இன்னிங்ஸ் பற்றி அவர் கூறும் போது, “நான் பேட்டிங்கில் நிறைய பந்துகளை சாப்பிட்டு விட்டேன். அது ஒரு நல்ல பிட்ச். விளக்கு வெளிச்சத்தில் இன்னும் நல்ல பிட்சாக மாறியது. பிட்ச் எப்படி நடந்து கொள்ளும் என்று நினைத்தோமோ அப்படியேதான் நடந்த கொண்டது. கடும் உஷ்ணம் ஒரு காரணியே.
டிவைன் பிராவோ, என் அழுத்தத்தை குறைத்தார். அவர் இவ்வாறு விளையாடுவார் என்றால் நான் பேட்டிங் ஆர்டரில் வேறு நிலையில் கூட களமிறங்கலாம். ஜடேஜா, அஸ்வின் பின்னால் இருக்கும் போது பேட்டிங்கிற்கு இது இன்னும் வலு சேர்க்கும் என்றே நான் கருதுகிறேன்” என்றார்.
37 பந்துகளைச் சந்தித்த தோனி அதில் 17 பந்துகளில் ரன் எதையும் எடுக்க முடியாமல் திணறினார் என்பது குறிப்பிடத்தக்கது.