விளையாட்டு

வார்னர், தவன் அதிரடியில் பெங்களூருவை வீழ்த்திய ஹைதராபாத்

செய்திப்பிரிவு

நேற்று பெங்களூரூவில் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

167 ரன்கள் இலக்கை விரட்டிய ஹைதரபாத் அணிக்கு, அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அதிரடித் துவக்கம் தந்தார். மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவனும் வார்னருக்கு ஈடுகொடுத்து ஆடினார். பவுண்டரி, சிக்ஸர் என மாறி மாறி விளாசிய வார்னர் 24 பந்துகளிலேயே 6 பவுண்டரி, 3 சிகஸர்களோடு அரை சதம் தொட்டார்.

8-வது ஓவரில் 57 ரன்களுக்கு வார்னட் ஆட்டமிழக்க தொடர்ந்து வந்த வில்லியம்சனும் 5 ரன்களில் வெளியேறினார். ஆனால் 10 ஓவர்களில் 95 ரன்களைக் குவித்திருந்த ஹைதராபாத் அணி இதற்குப் பிறகு விக்கெட் இழப்பின்றி ஆடியது. தவான், ராகுல் இணை பதட்டமின்றி வெற்றி இலக்கை நோக்கிச் சென்றனர். ஷிகர் தவன் 41 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.

17.2 ஓவர்களில் ஹைதராபாத் வீரர் ராகுல், ஒரு சிக்ஸர் அடித்து தனது அணிக்கான வெற்றி இலக்கைக் கடந்தார். இறுதியில் 2 விக்கெட்டுகளுக்கு 172 ரன்களை ஹைதராபாத் எடுத்திருந்தது. தவன் 50 ரன்களுடனும், ராகுல் 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத அணி பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. பெங்களூர் அணிக்கு கிறிஸ் கெயில், அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார். அதிரடியாக ஆடிய அவர் 16 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கேப்டன் கோலியுடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக். இதன்பிறகு அதிரடியில் இறங்கிய கோலி, பிரவீண் குமார் பந்துவீச்சில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்டினார். அந்த அணி 77 ரன்களை எட்டியபோது கார்த்திக் 9 ரன்களில் (11 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த டிவில்லியர்ஸ், போபாரா வீசிய 12-வது ஓவரில் இரு பவுண்டரி களை விரட்ட, அதே ஓவரில் கோலி ஆட்டமிழந்தார். அவர் 37 பந்து களில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த மன்தீப் சிங் டக் அவுட்டாக, டேரன் சமி களம்புகுந்தார்.

போபாரா வீசிய 14-வது ஓவரில் டிவில்லியர்ஸ் ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்ஸரையும் விரட்ட, அந்த ஓவரின் முடிவில் 110 ரன்களை எட்டியது பெங்களூர். மறுமுனையில் தடுமாறிய டேரன் சமி 6 ரன்களில் ஆட்டமிழந் தார்.

இதையடுத்து களமிறங்கிய அபாட், பிரவீண் குமார் வீசிய 18-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்டினார். டிரென்ட் போல்ட் வீசிய அடுத்த ஓவரை எதிர்கொண்ட டிவில்லியர்ஸ், முதல் பந்தில் பவுண்டரி அடித்த நிலையில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார். அதே ஓவரின் 3-வது பந்தில் சீன் அபாட் வெளியேறினார். அவர் 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ஹர்ஷல் படேல் 2, வருண் ஆரோன் 6, அபு நெசிம் 4 ரன்களில் வெளியேற, 19.5 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பெங்களூர்.

கெயில் 200

இந்த ஆட்டத்தில் ஒரு சிக்ஸரை அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டியில் 200 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கிறிஸ் கெயில்.

SCROLL FOR NEXT