ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடும் மும்பையைச் சேர்ந்த வீரர் ஒருவரை அவரது சக ரஞ்சி வீரர் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர்பாக ஸ்பாட் பிக்சிங் நோக்கத்துடன் அணுகியதாக திடீர் புகார் எழுந்துள்ளது.
இந்தச் செய்தியை உறுதி செய்த பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர், “ஒரு வீரர் அணுகப்பட்டுள்ளார் (ஸ்பாட் பிக்சிங்கிற்காக) ஆனால் அந்த வீரர் உடனடியாக இந்தத் தகவலை பிசிசிஐ ஊழல் ஒழிப்பு கமிட்டியிடம் தெரிவித்து விட்டார். பிசிசிஐ-யின் விழிப்புணர்வு பயிற்சிக்கான பலன் கிடைத்துள்ளது.” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பதிவில், “வீர்ர்கள் எச்சரிக்கையுடன் உள்ளனர். எங்களது தொடர் அறிவுறுத்தலின் விளைவாக வீரர்களுக்கு இவ்விவகாரத்தை அணுகும் விதம் தெரிந்துள்ளது” என்றார்.
ஆனால், தாக்கூர் வீரர்கள் பெயர்களை வெளியிடவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மும்பையைச் சேர்ந்த 5 வீர்ர்கள் உள்ளனர். அஜிங்கிய ரஹானே, பிரவீண் தாம்பே, தினேஷ் சாலுங்கே, தவல் குல்கர்னி மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோர் மும்பையைச் சேர்ந்தவர்கள்.
ஐபிஎல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகமும் தங்கள் வீரர் மீண்டும் அணுகப்பட்டதை உறுதி செய்தனர். "ஒரு மாதத்துக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஒருவரை மற்றொரு வீரர் (ஐபிஎல்-ல் இல்லாத வீரர்) முறைதவறி அணுகியிருக்கிறார். அதாவது 2015 ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக” என்று ராயல்ஸ் அணி சி.இ.ஓ ரகு ஐயர் கூறியுள்ளார்.
ஆனால் அந்த வீரர் உயர்ந்தபட்ச நேர்மையுடன் உடனடியாக இது பற்றி புகார் தெரிவித்தார் என்று ரகு ஐயர் அந்த வீரரை பாராட்டியுள்ளார்.
ஏற்கெனவே எழுந்த சூதாட்ட விவகாரங்களினால் வழக்குகள் பல விசாரணையில் இருந்து வருகின்றன. ஐபிஎல் ஆட்டத்தின் மீது தீராத களங்கம் விழுந்தது. உச்ச நீதிமன்றம் இதனையடுத்து கடும் கேள்விகளை எழுப்பி பிசிசிஐ-க்கு சில வழிகாட்டு நெறிமுறைகளையும் உத்தரவுகளையும் பிறப்பித்தது.
இந்நிலையில் மற்றொரு ரஞ்சி வீரர் சக வீரரை அணுகியிருப்பது இன்னும் ஸ்பாட் பிக்சிங் பூதம் மறையவில்லை என்பதை அறிவுறுத்துகிறது.