விளையாட்டு

தரவரிசையில் முதலிடம் பிடித்த சானியாவுக்கு குவியும் வாழ்த்துகள்

செய்திப்பிரிவு

மகளிர் இரட்டையர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இந்திய டென்னிஸ் வீராங்கனை என்ற வரலாற்றைப் படைத்திருக்கும் சானியா மிர்சாவுக்கு ஏராளமான வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து விளையாடி வரும் சானியா மிர்சா, நேற்று முன்தினம் அமெரிக்காவின் சார்லஸ்டான் நகரில் நடைபெற்ற ஃபேமிலி சர்க்கிள் கோப்பை போட்டியில் பட்டம் வென்றார். இதன்மூலம் தொடர்ச்சியாக 3-வது பட்டத்தை வென்றுள்ளார் சானியா. முன்னதாக இண்டியன்ஸ்வெல்ஸ், மியாமி மாஸ்டர்ஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

சார்லஸ்டான் போட்டியில் வெற்றி கண்டதன் மூலம் 470 புள்ளிகளைப் பெற்ற சானியா 7,965 புள்ளிகளுடன் சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். முதலிடத்தில் இருந்த இத்தாலியின் சாரா எர்ராணி, ராபர்ட்டா வின்ஸி (இருவரும் 7,640 புள்ளிகள்) ஆகியோர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முதலிடத்தைப் பிடித்து வரலாறு படைத்திருக்கும் சானியாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உங்களுடைய சாதனையால் ஒட்டுமொத்த இந்தியாவையே பெருமைப்பட வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு எனது பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார்.

பிரபலங்கள் பலர் ட்விட்டர் மூலம் சானியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

மகேஷ் பூபதி (இந்திய டென்னிஸ் வீரர்): சானியா, முதலிடத்தைப் பிடித்திருக்கும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.

சச்சின் டெண்டுல்கர் (முன்னாள் கிரிக்கெட் வீரர்): இரட்டையர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்ததற்கு வாழ்த்துகள் சானியா. உங்களுடைய இந்த சாதனை வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.

விராட் கோலி (இந்திய கிரிக்கெட் வீரர்): முதலில் சாய்னா முதலிடத்தைப் பிடித்தார். இப்போது சானியா மிர்சா முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். நீங்கள் உங்களின் வலிமையான ஆட்டத்தால் முதலிடத்துக்கு முன்னேறி எங்களை பெருமை கொள்ள செய்திருக்கிறீர்கள்.

பிரணாப் முகர்ஜி (குடியரசுத் தலைவர்): சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருப்பதற்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகள் சானியா.

கிரண் பேடி (பாஜக): முதலில் சாய்னா, இப்போது சானியா. இந்திய விளையாட்டுத் துறைக்கு அற்புதமான தருணம்.

SCROLL FOR NEXT