இந்தோனேசியாவின் பலேம்பங் நகரில் நடைபெற்ற 22-வது பிரஸிடென்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் ஆகி யுள்ளது.
இந்திய வீரர்கள் ராகேஷ் குமார் (69 கிலோ), ஹர்பால் சிங் (75 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்தது. இதேபோல் இந்திய வீராங்கனைகள் சர்ஜுபாலா (48 கிலோ), பிங்கி ஜங்ரா (51 கிலோ) ஆகியோர் மகளிர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.
இந்தியாவின் மணீஷ் குமார் 60 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 33 புள்ளிகளைப் பெற்ற இந்திய அணி முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் ஆனது. மங்கோலியா 2-வது இடத்தைப் பிடித்தது.
வெற்றி குறித்துப் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் குருபாக்ஸ் சிங் சாந்து, “இந்த போட்டியில் முதல்முறையாக நாங்கள் சாம்பியன் ஆகியிருக்கிறோம். இந்திய குத்துச்சண்டை துறை முன்னேறி வருவதை இந்த வெற்றி காட்டுகிறது. இந்திய வீரர்களின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய குத்துச்சண்டை துறை மேலும் முன்னேற்றம் அடையும் என நம்புகிறோம்” என்றார்.
பிரஸிடென்ட் கோப்பை போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 130 குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டது குறிப்பிடத் தக்கது.