விளையாட்டு

ஜெர்மெய்ன் பிளாக்வுட் அபார சதம்: மே.இ.தீவுகள் 295 ரன்களுக்கு சுருண்டது

செய்திப்பிரிவு

ஆண்டிகுவாவில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் தன் முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் இங்கிலாந்து 104 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் தனது 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து மொத்தம் 220 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. களத்தில் கேரி பேலன்ஸ் 44 ரன்களுடனும், ஜோ ரூட் 32 ரன்களுடனும் உள்ளனர்.

3-ம் நாளான நேற்று மே.இ.தீவுகள் 155/4 என்று தொடங்கியது சந்தர்பால் 29 ரன்களுடனும் சத நாயகன் பிளாக்வுட் 30 ரன்களுடனும் இறங்கினர்.

சந்தர் பால் 46 ரன்களில் ஆஃப் ஸ்பின்னர் ஜேம்ஸ் டிரெட்வெல்லிடம் வெளியேறினார். சந்தர்பால், பிளாக்வுட் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக மிக முக்கியமான 93 ரன்களைச் சேர்த்தனர்.

கிறிஸ் ஜோர்டான், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் நல்ல வேகம் காண்பித்தனார். ஆனால், பிளாக்வுட் அசரவில்லை. இவருக்கு 43 ரன்களில் ஸ்லிப்பில் கேட்ச் விடப்பட்டது. முன்னதாக 21 ரன்களில் இருந்த போது நோ-பாலில் அவுட் ஆனார். ஆனால், அதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் பிளாக்வுட்.

பென் ஸ்டோக்ஸ் பந்தை லாங் ஆஃபில் ஒரு சிக்ஸ் அடித்தார் பிளாக்வுட். அதன் பிறகு அசத்தல் பவுண்டரிகளை விளாசி 80-களுக்குள் நுழைந்தார். பிறகு டிரெட்வெல் பந்தை மேலேறி வந்து ஆடி 98 ரன்களை எட்டினார். அதன் பிறகு தனது முதல் டெஸ்ட் சதத்தை 205 பந்துகளில் எடுத்தார் பிளாக்வுட். ஆனால் இவருக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் பதற்றம் இருந்தது. இதனை பிராட் நன்றாகப் பயன்படுத்தி சில அசவுகரியங்களை ஏற்படுத்தினார், ஆனால் வீழ்த்த முடியவில்லை.

ஆண்டர்சனையும் ஒரு சிக்ஸ் அடித்தார் பிளாக்வுட், பேட்டிங் முழுதும் அசாத்திய தைரியம் காட்டிய பிளாக்வுட் ஆண்டர்சனை ஏறி வந்து சிக்ஸ் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் இடைவெளிகளில் தூக்கி அடிக்க பிளாக்வுட் தயங்கவில்லை.

சதம் எடுத்து பிளாக்வுட் 112 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக வந்தார். அவருக்கு மே.இ.தீவுகளின் பின்கள வீரர்கள் உதவி புரியவில்லை. கடைசி 19 ரன்களில் 4 விக்கெட்டுகளை மே.இ.தீவுகள் பறிகொடுத்தது. ஆனாலும் 99/4 என்ற நிலையில் பிளாக்வுட்டின் தைரியமான ஆட்டத்தினால் அந்த அணி 295 ரன்கள் வரை வர முடிந்தது.

பிளாக்வுட் 220 பந்துகளில் 14 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 112 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இங்கிலாந்து தரப்பில் டிரெட்வெல் 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், பிராட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் டிராட் மீண்டும் சோபிக்க முடியாமல் 4 ரன்களில் ஜெரோம் டெய்லரிடம் வீழ்ந்தார். டிராட்டின் கால் நகர்த்தல் சரியாக அமையவில்லை. ஃபுல் லெந்த் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். கேப்டன் குக் 13 ரன்களில் டெய்லர் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தை கல்லி திசையில் பென்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இயன் பெல் 11 ரன்களில் ரன் அவுட் ஆனார். 52/3 என்ற நிலையில் மேலும் சேதமில்லாமல் கேரி பேலன்ஸ், மற்றும் ஜோ ரூட் கொண்டு சென்றனர். இன்று ஆட்டத்தின் 4-ம் நாள்.

SCROLL FOR NEXT