கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் ஆப் ஸ்பின்னராக ஐபிஎல் போட்டியில் பந்துவீச இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தடை விதித்துள்ளது.
அவரது பந்து வீச்சு முறை சர்ச்சைக்குரியதாக இருந்ததால் பரிசோதனை மேற்கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இனி அவரால் இந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற முடியாது.
மேற்கிந்தியத்தீவுகளைச் சேர்ந்த சுனில் நரைன் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ளார். முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அவர் அணியில் பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில் பிசிசிஐ நடத்தும் அனைத்து வகை போட்டிகளிலும் அவர் பந்துவீச்சாளராக விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 22-ம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நரைன் பந்து வீசினார். அவர் பந்து வீசும் முறையில் சந்தேகம் ஏற்பட்டதால், சென்னையில் வைத்து பையோமெக்கானிக்கல் முறையில் அவரது பந்து வீச்சு வீடியோ ஆய்வு செய்யப்பட்டது.
இதில் அவர் விதிகளுக்கு புறம்பாக பந்து வீசுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆப் ஸ்பின்னராக பந்து வீச பிசிசிஐ தடை விதித்துள்ளது. எனினும் அவர் பந்து வீசும் முறையை மாற்றிக் கொண்டால், அதனை ஆய்வு செய்து தடையை நீக்க வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
முன்னதாக 2014-ம் ஆண்டு சாம்பியன் லீக் டி20 போட்டியில் நரைன் தூஸ்ரா முறையில் பந்து வீசியது விதிகளுக்கு முரணானது என்று கூறி பந்து வீச தடை செய்யப்பட்டார்.