மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் குவித்தது இங்கிலாந்து.
மேற்கிந்தியத் தீவுகளின் நார்த் சவுண்ட் (ஆன்டிகுவா) நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களான டிராட் ரன் ஏதுமின்றியும், கேப்டன் குக் 11 ரன்களிலும், பின்னர் வந்த கேரி பேலன்ஸ் 10 ரன்களிலும் வெளியேற, 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து 4-வது விக்கெட் டுக்கு இணைந்த இயான் பெல்-ஜோ ரூட் ஜோடி வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதனால் 60 ஓவர்களில் இங்கிலாந்து 200 ரன்களை எட்டியது. அந்த அணி 211 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 133 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் குவித்த ஜோ ரூட், டெய்லர் பந்துவீச்சில் போல்டு ஆனார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்தது.
இதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் களமிறங்க, மறுமுனையில் தொடர்ந்து அசத்தலாக ஆடிய பெல், சாமுவேல்ஸ் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து தனது 22-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் தொடர்ச்சியாக பவுண்டரிகளை பறக்கவிட்டார். 59 பந்துகளில் அரைசதம் கண்ட அவர், டெய்லர் பந்துவீச்சில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாச, இங்கிலாந்து 300 ரன்களைக் கடந்தது.
மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இயான் பெல், 89-வது ஓவரின் கடைசிப் பந்தில் வீழ்ந்தார். அவர் 256 பந்துகளில் 1 சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது. ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.
பென் ஸ்டோக்ஸ் 80 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 71 ரன்களுடனும், டிரெட்வெல் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டெய்லர், கெமர் ரோச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.