தடகளப் போட்டிக்கான பட்டயப் படிப்பை முடித்து பயிற்சியைத் தொடங்கியுள்ளார் கடந்த 2006-ல் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தடகள வீராங்கனை சாந்தி.
புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தில் பிறந்த சாந்தி கடந்த 2003-ல் தென்கொரியாவில் நடைபெற்ற உலக சமாதானத்துக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி, 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் என சர்வதேச வெற்றிக் கணக்கைத் தொடங்கினார்.
தொடர்ந்து பல போட்டிகளில் வெற்றி வாகை சூடிய சாந்தி, 2006-ல் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவில் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
பதக்கம் வென்று வெற்றியை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்ட சாந்திக்கு பாலின பிரச்சினையால் அந்தப் போட்டியின் அடுத் தடுத்த பந்தயங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதுடன் அவருடைய பதக்கமும் பறிக்கப்பட்டது. எனினும், தமிழக அரசு அப்போது அவருக்கு அளித்த ரொக்கமும், புதுக்கோட்டையில் கிடைத்த தற்காலிக தடகளப் பயிற்சியாளர் பணியும் அவருக்கு ஆறுதலை அளித்தது. இவரது 3 ஆண்டு பயிற்சியில் பலர் தேசிய தடகள வீரர், வீராங்கனைகளாக உயர்ந்தனர்.
அரசு வழங்கிய ரூ. 5 ஆயிரம் மதிப்பூதியம் போதவில்லை என்ப தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டு மென பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு ஏற்கவில்லை என்பதால் 2010 ஜூலை 31-ல் பணியை ராஜினாமா செய்தார்.
அதன்பிறகு தனியார் கல்லூரிகளில் வேலை தேடியும் கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் பெற்றோரை நாடி அவர்களோடு ரூ.200-க்கு செங்கல்சூளையில் தினக்கூலி வேலையில் ஈடுபட்டார்.
ஆசிய தடகள வீராங்களை மண் பிசைகிறாரே என்று ஆதங்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மூலம் பெங்களூரில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (சாய்) பயிற்சி மையத்தில் தடகளப் போட்டி பயிற்சியாளருக்கான ஒரு வருட பட்டய படிப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சேர்க்கப்பட்டு கடந்த மாதத்துடன் படிப்பும் முடிந்துவிட்டது.
இதுகுறித்து சாந்தி கூறியது: “யாருமே படித்துமுடித்துதான் பதக்கம் பெறுவார்கள். ஆனால், எனது வாழ்க்கையில் தலைகீழாக நடந்தது. எனது அசைக்க முடியாத தன்னம்பிக்கையால் மைதானத்தில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறேன்.
10 மாத பயிற்சியில் மைதானத் தில் பயிற்சி எடுப்பதைத் தவிர மனிதனின் உடற்செயல்பாடு, உளவியல், உள்ளமைப்பு உள்ளிட்ட அறிவியல் பாடமும் படித்துள்ளது மிகவும் பயனுள் ளதாக இருந்தது. மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆசிய வீரர்கள், வீராங்கனைகளைச் சந்தித்ததும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சி முடிந்துவிட்டது. மயிலாடுதுறையில் உள்ள விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத் தின் பயிற்சி மையத்தில் வெள்ளிக் கிழமை (மே 2) முதல் 2 மாதம் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். இதன்மூலம் எனக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. நான் ஓடுவேன் என்று. ஆனால் நான் ஓடி மீண்டும் பதக்கம் பெற முடியாது என்பதால் தற்போதைய 2 மாத பயிற்சிக்குப் பிறகு எனது பயிற்சி யில் உருவாகும் எண்ணற்ற வீரர்கள் மூலம் அந்தப் பதக்கத்தை மீண்டும் பெறுவேன்” என்றார்.