விளையாட்டு

சீனிவாசனுடன் உரசல் - உலகக் கோப்பையில் அவமதிப்பு: ஐசிசி பிரசிடென்ட் ராஜினாமா

பிடிஐ

உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பிறகு சாம்பியன் ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை அளிக்க தன்னை அழைக்காததால் முஸ்தபா கமல் கடும் கோபத்துடன் தனது ஐசிசி பிரசிடென்ட் (President) பதவியை ராஜினாமா செய்தார்.

ஐசிசி தலைவர் (Chairman) சீனிவாசன் உடனான உரசலின் எதிரொலியாகவே முஸ்தபா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அமைப்பில், தலைவரைக் காட்டிலும் பிரசிடென்ட் என்பது சற்றே உயர் பதவி என்றாலும், தலைவருக்கே செயல்திட்ட அதிகாரங்கள் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பையை கையளிக்க தன்னை அழைக்கவில்லை என்ற காரணத்தினால் ஆத்திரமடைந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஐசிசி பிரசிடென்ட் முஸ்தபா கமல் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

உலக சாம்பியன் ஆஸ்திரேலியா அணிக்கு உலகக் கோப்பையை கையளிக்க முஸ்தபா கமல் அழைக்கப்படவில்லை, மாறாக ஐசிசி சேர்மன் என்.சீனிவாசன் அழைக்கப்பட்டார். இது திடீரென மாற்றப்பட்ட முடிவு என்று அப்போதே விமர்சனக் குரல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

டாக்காவில் நடைபெற்ற நெரிசலான செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

"உலகக் கோப்பையை வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியிடம் கையளிக்க நான் அனுமதிக்கப்படவில்லை. இதனால் எனது தூக்கம் பாழானது. ஏனெனில் நான் எனது நாட்டை பிரதிநிதித்துவம் செய்கிறேன். எனது உரிமை பறிக்கப்பட்டது.

நான் எனது ராஜினாமா கடிதத்தை ஐசிசி-க்கு அனுப்பிவிட்டேன். என்னால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது. இவர்கள் கிரிக்கெட்டை நடத்த தகுதியில்லாதவர்கள். இவர்கள் ஆட்டத்தை மாசுபடுத்தி வருகின்றனர். நான் ஏன் ராஜினாமா செய்தேன் என்பதை மக்கள் ஆய்வு செய்யக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

உலகக் கோப்பை போட்டித் தொடரில் இந்தியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் நடுவர் தீர்ப்புகள் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது என்றும் அந்த ஆட்டத்தின் முடிவு இந்தியா வெற்றி பெறவே முன் ஏற்பாட்டுடன் நடைபெற்றது என்றும் கடுமையாக விமர்சித்தார் முஸ்தபா கமல். இதனையடுத்து ஐசிசி தரப்பில் இவர் மீது கடும் கண்டனக்குரல்கள் எழுந்தன.

ரோஹித் சர்மா கொடுத்த கேட்சை மறுக்கும் விதமாக நோ-பால் கொடுத்த விவகாரத்தை கடும் விமர்சனம் செய்தார் முஸ்தபா கமல் இதனையடுத்தே அவர் உலகக் கோப்பையை அளிக்க அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

முஸ்தபா கமலின் நடுவர் தீர்ப்பு விமர்சனத்துக்கு சீனிவாசன் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவிக்கவில்லை என்றாலும் ஐசிசி வாரிய உறுப்பினர்களிடன் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டதாக செய்திகள் எழுந்தன.

ஆனால் ஐசிசி விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு ஜனவரி 2015-இல் முழு உறுப்பினர்கள் குழுவும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதென்னவெனில் ஐசிசி நடத்தும் தொடர்கள் அனைத்திலும் கோப்பையை பிரசிடெண்ட் மட்டுமே அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT