விளையாட்டு

ஜான்சன் பந்தில் ரஹானே அடித்த சூப்பர் ஷாட்டுக்கு மனமார கை தட்டிய சேவாக்

இரா.முத்துக்குமார்

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. ரஹானே, வாட்சன் தொடக்க வீரர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ரஹானே 32 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார்.

அவர் அடித்த 5 பவுண்டரிகளில் 4 பவுண்டரிகள் ஆஸ்திரேலிய வேகப்புயல் மிட்செல் ஜான்சனின் பந்துகளில் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆட்டத்தின் 4-வது ஓவரை மிட்செல் ஜான்சன் வீச 2-வது பந்தில் ஒரு பலமான எல்.பி.முறையீடு நடுவர் கொடுக்கவில்லை. லெக் ஸ்டம்புக்கு வெளீயே பிட்ச் ஆனது போல் தெரிந்தது. கொஞ்சம் பந்தும் எழும்புவது போல் தெரிந்தது. நாட் அவுட். அடுத்த பந்தும் இன்ஸ்விங்கர், ரஹானே சரியாக ஆடவில்லை பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பேடைத் தாக்கியது.

4-வது பந்து பவுன்சர். ரஹானே புல் ஆடினார். டாப் எட்ஜ் எடுத்து லாங் லெக் திசையில் பவுண்டரிக்குப் பறந்தது.

அடுத்த ஷாட்தான் அற்புதமான ஷாட். இதனைப் மனமுவந்து பாராட்டி கை தட்டினார் சேவாக். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற ஜான்சன் பந்தை ரஹானே முன்னங்காலில் சென்று கட்/டிரைவ் ஆடினார். அதாவது முழுமையான கட்டும் அல்ல, முழுமையான டிரைவும் அல்ல இரண்டுக்கும் இடைபட்ட ஒரு திராவிட் ரக, வெங்சர்க்கார் ரக ஷாட் அது. பந்து பாயிண்ட் பவுண்டரிக்கு பறந்தது.

ஜான்சனின் வேகத்தில் இத்தகைய ஷாட்டை ஆடுவது கடினமே. ஷாட்டின் கடினத்தன்மையையும் அதனை ரஹானே ஆடிய நேர்த்தியையும் எதிரணி வீரராக இருந்தாலும் சேவாக் அந்த ஷாட்டின் அற்புதத்துக்காக பாராட்டி கை தட்டினார்.

பிறகு 6-வது ஓவரை ஜான்சன் வீச ரஹானே மீண்டும் இரண்டு அருமையான பவுண்டரிகளை அடித்தார். ஒன்று ஸ்கொயர்லெக் திசையில் பறந்தது மற்றொன்று பளார் கட் ஷாட். 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 90 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் இழப்பில்லை.

SCROLL FOR NEXT