விளையாட்டு

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பவுலர் ஃபவாத் அகமது

ஐஏஎன்எஸ்

ஆஷஸ் டெஸ்ட் தொடர் மற்றும் மே.இ.தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபவாத் அகமது என்ற லெக் ஸ்பின்னர் முதல் முறையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஆடம் வோஜஸ் என்ற பேட்ஸ்மெனும் டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணியில் கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோருக்கு இடமில்லை. ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ் இருவரும் 17 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

லெக் ஸ்பின்னர் ஃபவாத் ஆலம், விக்டோரியா அணியின் ஷெஃபீல்ட் ஷீல்ட் வெற்றிக்கு வித்திட்டார். முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியதால் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய குடியுரிமையை இவர் 2013-ம் ஆண்டு பெற்றார். உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பல ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு ஃபவாத் அகமது சங்கடங்களைக் கொடுத்துள்ளார். இவர்தான் ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் தொடரில் 48 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்து வீச்சாளராகத் திகழ்கிறார்.

ஆடம் வோஜஸ் உள்நாட்டு கிரிக்கெட்டில் 1358 ரன்களை 104.46 என்ற சராசரியில் எடுத்து கலக்கியதால் அவரையும் டெஸ்ட் அணியில் சேர்த்துள்ளனர்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வருமாறு:

மைக்கேல் கிளார்க் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), ஃபவாத் அகமது, ;பிராட் ஹேடின், ஜோஷ் ஹேசில்வுட், ரயான் ஹேரிஸ் (ஆஷஸ் தொடருக்கு மட்டும்), மிட்செல் ஜான்சன், நேதன் லயன், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், பீட்டர் நெவில், கிறிஸ் ராஜர்ஸ், பீட்டர் சிடில், மிட்செல் ஸ்டார்க், ஆடம் வோஜஸ், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன்.

SCROLL FOR NEXT