அடிலெய்டில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் பிரிவு ஏ போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேச வீரர் மஹ்முதுல்லா சதம் அடித்து சாதனை புரிந்தார்.
டாஸ் வென்ற இங்கிலாந்தினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட வங்கதேசம் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியுள்ளது. இலக்கை எடுத்து வென்றேயாக வேண்டிய நிலையில் இங்கிலாந்து உள்ளது. தோல்வியடைந்தால் வங்கதேசம் காலிறுதிக்கு முன்னேறி விடும். இந்நிலையில் இலக்கைக் கவனமாகத் துரத்தி வருகிறது இங்கிலாந்து.
ஒருநாள் போட்டிகளில் தன் முதல் சதமெடுத்த மஹ்முதுல்லா உலகக்கோப்பை போட்டிகளில் சதம் எடுத்த வங்கதேச வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார். 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையில் களமிறங்கிய மஹ்முதுல்லா 138 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து 5-வது விக்கெட்டாக 46-வது ஓவரில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் மீண்டும் அற்புதமான ஒரு இன்னிங்சை ஆடி 77 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்தார்.
சவும்யா சர்க்கார் (40) 3-வது விக்கெட்டுக்காக மஹ்முதுல்லாவுடன் இணைந்து இருவரும் 86 ரன்களை சேர்க்க, முஷ்பிகுர், மஹ்முதுல்லா ஜோடி இணைந்து 141ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். கடந்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்தைச் சந்தித்த பிறகு இங்கிலாந்து அணியை வங்கதேசம் நடுவில் சந்திக்கவில்லை. சிட்டகாங்கில் நடைபெற்ற 2011 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து தோல்வி தழுவியது நினைவிருக்கலாம்.
முன்னதாக பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருக்க, அதனைப் பயன்படுத்திய ஆண்டர்சன் 3 ஸ்லிப்களுடன் வீசினார். இதில் இம்ருல் கயேஸ் 3-வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேற, தமிம் இக்பாலும் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினார். மேலும் ஒரு ஸ்லிப் கூட்டப்பட முதல் ஸ்பெல்லில் ஆண்டர்சன் 6 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஷாகிப் அல் ஹசன், மொயீன் அலி பந்து அவ்வளவு திரும்பும் என்று எதிர்பார்க்கவில்லை. 2 ரன்னில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கிறிஸ் ஜோர்டானுக்கு வாய்ப்பு அளிக்கப் படாமல் அவர் சரியாக வீசவில்லை. கடைசி ஓவர்களில்தான் அவர் சரியாக வீசினார். வோக்ஸ் இன்று 10 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்து சோபிக்காமல் போனார். பிராட் சுமாராக வீசி 52 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
வங்கதேசம் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி 24 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்க்கு 111 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. பெல் 58 ரன்களுடனும், ரூட் 5 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.