விளையாட்டு

டென்னிஸ் இரட்டையர் தரவரிசை முதலிடம்: தைவான் வீராங்கனை சாதனை

செய்திப்பிரிவு

சர்வதேச டென்னிஸ் மகளிர் இரட்டையர் தரவரிசையில் தைவானின் ஷு சூ-விய், சீனாவின் பெங் சுயாய் ஜோடி முதலிடம் பிடித்துள்ளது. தைவானைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கும் இந்த ஜோடி முன்னேறியுள்ளது. முதலிடம் பிடித்து சாதனை படைத்தது குறித்து தைவான் வீராங்கனை ஷு சூ-விய் கூறியது:

முதலிடத்தை பிடித்திருப்பதன் மூலம் மிகஉயரிய கவுரவத்தை அடைந்திருப்பதாக உணருகிறேன். அதிலும் எங்கள் நாட்டில் இருந்து டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் பெண் என்ற சாதனை மிகவும் பெருமையளிக்கிறது. நம்மால் நாட்டுக்கு பெருமை கிடைப்பதுதான் விளையாட்டு வீரர்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த சீன – தைவான் ஜோடி இதுவரை 11 பட்டங்களை வென்றுள்ளது. இறுதி ஆட்டத்தில் இவர்கள் தோற்றதே இல்லை என்பதுவும் ஒரு சாதனைதான். இந்த இரு பெண்களும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்று சர்வதேச மகளிர்டென்னிஸ் சங்க தலைவர் ஸ்டேன்ஸ் அலாஸ்டர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT