விளையாட்டு

உருகுவே கால்பந்து வீரர் டீகோ ஃபோர்லான் ஓய்வு

ஏஎஃப்பி

உருகுவே கால்பந்து வீரர் டீகோ ஃபோர்லான் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு குறித்துப் பேசிய அவர், “இது மிகவும் கடின மான முடிவு. எனினும் நான் ஓய்வு பெற இது சரியான தருணம் என உணர்ந்தேன். எல்லா விஷயங்களிலுமே ஆரம்பம், முடிவு என இரண்டும் இருக்கும். புதிய தலைமுறை வீரர்களுக்கு வழிவிடுவதற் கான நேரம் இது. இதேபோல் உருகுவே அணி புதிய பாதையில் செல்வதற்கான தருணம் இது.

தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து நாட்டுக்காக ஆடியதை கவுரவமாகக் கருதுகிறேன். நான் குழந்தையாக இருந்தபோதிலிருந்து உருகுவேக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்தது. கால்பந்து போட்டிகளின்போது தேசிய கீதம் இசைக்கப்படும் நேரத்தில் வீரர்கள் அனைவரும் ஒன்றாக நிற்பதை தொலைக்காட்சியில் பார்த்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

அதுதான் நான் சிறந்த கால்பந்து வீரராக உருவெடுக்க உதவியது. அதேவேளையில் கிளப் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை என்றார்.

அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய உருகுவே வீரரான இவர், மூன்று உலகக் கோப்பைகளில் பங்கேற்றுள்ளதோடு, 2011-ல் கோபா அமெரிக்கா சாம்பியன்ஷிப் போட்டியில் உருகுவே அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்.

112 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள டீகோ ஃபோர்லான் 36 கோல்களை அடித்துள்ளார். இதே போல் 2010 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார்.

SCROLL FOR NEXT