விளையாட்டு

ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு திரும்ப யுவராஜ், ஜாகீர் கான் தீவிரம்

பிடிஐ

2015 ஐபில் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு விளையாடும் யுவராஜ் சிங் மற்றும் ஜாகீர் கான், இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் முனைப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

யுவராஜ் சிங்குக்கு ரூ.16 கோடி விலை கொடுத்த டெல்லி டேர் டெவில்ஸ், ஜாகீர் கானை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இந்திய அணிக்குத் திரும்புவதில் எந்த அளவு தீவிரம் காட்டுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த யுவராஜ் சிங்,

"நிச்சயமாக ஆமாம். புற்று நோய் சிகிச்சைக்குப் பிறகே எனக்கு 2 ஆண்டு காலம் கடினமாக அமைந்தது. நான் இப்போது நல்ல நிலையில் உள்ளேன். உள்நாட்டு கிரிக்கெட்டில் இந்த சீசன் எனக்கு நல்லபடியாக அமைந்துள்ளது.

இந்நிலையிலிருந்து மேலும் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் நுழைய பாடுபடுவேன்.” என்றார் யுவராஜ் சிங்.

டெல்லி அணியின் விளம்பரதாரர்களாக டைகின் ஏர்-கண்டிஷனிங் நிறுவனம் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியில் யுவராஜ், ஜாகீர் கான் மற்றும் டெல்லி டேர் டெவில்ஸ் வீரர்களில் சிலர் கலந்து கொண்டனர்.

ஜாகீர் கான் கூறும் போது, “மீண்டும் கிரிக்கெட்டுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. காயம் காரணமாக கிரிக்கெட்டில் சில காலங்கள் இல்லை, இப்போது மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சமயத்தில் ஒரு தொடரில்தான் கவனம், இப்போதைக்கு ஐபிஎல் முதல் படி.

பயிற்சியாளர் கேரி கர்ஸ்டனுடன் இணைந்து மீண்டும் செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. அவருடன் நீண்ட நேரம் செலவு செய்துள்ளேன். டெல்லி அணியில் நிறைய புதுமுகங்கள் உள்ளனர். இது ஒரு புதிய சவால். நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்றர் ஜாகீர் கான்.

SCROLL FOR NEXT