இந்தியா உலகக்கோப்பையில் தொடர் வெற்றிகளைப் பெற்று வருவதற்கு தோனியின் கேப்டன்சியே காரணம் என்கிறார் இயன் சாப்பல்.
கேப்டன்சியில் தவறிழைக்கும் போது சரியாக அதனைச் சுட்டிக்காட்டி வந்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் தற்போது தோனி கேப்டன்சியில் பெரிய மாற்றம் தெரிகிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இயன் சாப்பலிடம் இது பற்றி கேட்ட போது, “முத்தரப்பு ஒருநாள் தொடருக்குப் பிறகே இந்திய அணி சகல விதங்களிலும் மாற்றமடைந்த ஒரு அணியாக உள்ளது, இந்த மாற்றத்துக்குக் காரணம் தோனி.
தோனி இந்த உலகக்கோப்பையில் வித்தியாசமான கேப்டனாக மாறியிருக்கிறார். அவர் தன் மாற்றத்துடன் இந்திய அணியையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
தோனி நிறைய முறை இதனைச் செய்துள்ளார். (அதாவது இலக்குகளைத் துரத்தி வெற்றி பெறுவதில்). இந்திய அணி அவர் மீது பெரிய அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஒரு அணி அதன் கேப்டனை நம்பும்போது அதிசயங்கள் நிகழும்.
இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்துவதில் முனைப்பு காட்டி இந்த உலகக்கோப்பையில் வெற்றி கண்டுள்ளது. நடு ஓவர்களில் தைரியமான அணுகுமுறை காட்டும் அணி முன்னேறுவதற்கான தன்மைகளைக் கொண்டுள்ளது. இந்திய அணி இதனைச் செய்து வருகிறது. இது எதனால் என்றால் அது தோனியின் கேப்டன்சியினால்தான்.” என்று கூறியுள்ளார் இயன் சாப்பல்.