விளையாட்டு

முதல் 10 ஓவர்களில் 17 சிக்சர்களை விளாசியுள்ள மெக்கல்லம்: ஆஸி.-நியூசி. புள்ளி விவரங்கள்

செய்திப்பிரிவு

2015 உலகக்கோப்பையில் அதிரடியில் எதிரணியினரை கதிகலங்கச் செய்து வரும் பிரெண்டன் மெக்கல்லம் கட்டாய முதல் 10 ஓவர் பவர் பிளேயில் மட்டும் 17 சிக்சர்களை இதுவரை விளாசியுள்ளார்.

நாளை மெல்போர்னில் நியூசிலாந்து முதன் முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா 7-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது 4 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது.

முதல் கட்டாய 10 ஓவர் பவர் பிளேயில் இதுவரை 58 சிக்சர்கள் விளாசப்பட்டுள்ளன. இதில் மெக்கல்லம் மட்டுமே 17 சிக்சர்களை அடித்துள்ளார்.

இந்த உலகக்கோப்பையில் இதுவரை 8 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள மெக்கல்லம் 10-வது ஓவரைத் தாண்டி ஒரு முறைதான் ஆடியுள்ளார். அது இலங்கைக்கு எதிராக கிறைஸ்ட் சர்ச் மைதானத்தில்.

முதல் 10 ஓவர்களில் இந்த உலகக்கோப்பையில் அவர் 150 பந்துகளை சந்தித்துள்ளார். இதில் 59 பவுண்டரிகளை விளாசி 308 ரன்களை எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 200 ரன்களுக்கும் மேல்.

இந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இரு அணிகளுமே ஒரேயொரு சதக்கூட்டணியையே எதிரணியினருக்கு அனுமதித்துள்ளது.

நியூசிலாந்து அணி சுமார் 23 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற விகிதத்தில் இந்த உலகக்கோப்பையில் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது.

நியூசி. வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் இந்த உலகக்கோப்பையில் 75 ஓவர்களை வீசி அதில் 14 மெய்டன்களை வீசியுள்ளார். மேலும் ரன் கொடுக்காமல் 296 பந்துகளை அவர் வீசியுள்ளார். இதுவே இந்த உலகக்கோப்பையில் மிகச்சிறந்ததாகும்.

இந்த உலகக்கோப்பையின் சிறந்த வீச்சாளர் டிரெண்ட் போல்ட் ஆவார். இவர் 21 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார். இவருக்குப் போட்டியாக மிட்செல் ஸ்டார்க் 20 விக்கெட்டுகளுடன் பின் தொடர்ந்து வருகிறார்.

மெல்போர்னில் ஆஸி. தொடக்க வீரர் ஏரோன் ஃபிஞ்சின் சராசரி 65.61. 6 இன்னிங்ஸ்களில் மெல்போர்னில் இவர் 2 சதங்கள் 1 அரைசதம் எடுத்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் அவரது கடைசி 19 ஓருநாள் போட்டிகளில் கலக்கி வருகிறார். முன்னதாக முதல் 38 ஒருநாள் போட்டிகளில் வெறும் 477 ரன்களுடன் சொதப்பி வந்த ஸ்மித், கடைசி 19 ஒருநாள் போட்டிகளில் 1016 ரன்களை 4 சதங்கள் 6 அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.

தற்போதைய ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசைக்கு எதிராக நியூசி. வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியின் பவுலிங் சராசரி 85.50 என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT