விளையாட்டு

திசாரா அதிரடியில் இலங்கை வெற்றி

செய்திப்பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இலங்கை.

முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

லண்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இலங்கையை பேட் செய்ய அழைத்தது. அந்த அணியின் தில்ஷான்-குஷல் பெரேரா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 2.4 ஓவர்களில் 24 ரன்கள் சேர்த்தது. 9 பந்துகளைச் சந்தித்த தில்ஷான் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்து வெளியேற, குஷல் பெரேரா

10 ரன்களில் நடையைக் கட்டினார்.

இதையடுத்து விதாஞ்சேவும், திரமானியும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடியாக ஆட இலங்கையின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ரவி போபாரா வீசிய 8-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி

களை விளாசிய விதாஞ்சே, 26 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, முதல் 10 ஓவர்களில் 79 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை.

திசாரா அதிரடி

பின்னர் வந்த கேப்டன் தினேஷ் சன்டிமல் 7 ரன்களிலும், மேத்யூஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழக்க, திரிமானி 32 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து வெளியேறினார். கடைசிக் கட்டத்தில் களம்புகுந்த திசாரா பெரேரா வெளுத்து வாங்கினார். அவர் 20 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து கடைசிப் பந்தில் வெளியேற, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது இலங்கை.

இங்கிலாந்து தரப்பில் அறிமுக வீரர் கார்னி 4 ஓவர்களில் 26 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பேட் செய்த இங்கிலாந்து அணியில் ஒருபுறம் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக ஆடியபோதும், மறுமுனையில் சரிவைத் தவிர்க்க முடியவில்லை. மைக்கேல் கேர்பெரி 7, இயான் பெல் 13, ஜோ ரூட் 5, கேப்டன் இயோன் மோர்கன் 5 ரன்களில் வெளியேறினர்.

அலெக்ஸ் அரைசதம்

இதையடுத்து அலெக்ஸ் ஹேலுடன் இணைந்தார் ஜோஸ் பட்லர். இந்த ஜோடி வேகமாக ஆட, 13.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இலங்கை. தொடர்ந்து அதிரடியாக ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் 33 பந்துகளில் அரைசதம் கண்டார். அந்த அணி 124 ரன்களை எட்டியபோது ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து ரவி போபாரா களமிறங்க, அலெக்ஸ் ஹேல்ஸ், மலிங்கா பந்துவீச்சில் போல்டு ஆனார். அவர் 41 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் குவித்தார். இதன்பிறகு கடைசிக் கட்டத்தில் போபாரா வேகம் காட்டியபோதும் அதற்கு பலன் இல்லாமல் போனது. இலங்கை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. 15 பந்துகளைச் சந்தித்த போபாரா 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கைத் தரப்பில் மலிங்கா 4 ஓவர்களில் 28 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

20 பந்துகளில் 49 ரன்களைக் குவித்ததோடு, மோர்கனையும் ஆட்டமிழக்கச் செய்த திசாரா பெரேரா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது இலங்கை.

SCROLL FOR NEXT