விளையாட்டு

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்: அடுத்த ஆண்டு நடத்த திட்டம்

செய்திப்பிரிவு

இந்தியா – பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடரை நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. அடுத்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு வரை மொத்தம் 6 கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவுள்ளன.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் 2008-ம் ஆண்டில் தாக்குதல் நடத்திய பிறகு இருநாடுகள் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெறுவது நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் 2012ல் இருநாடுகள் இடையே 3 ஒருநாள் கிரிக்கெட், 2 இருபது ஓவர் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. அதன் பிறகு ஐசிசி நடத்திய கிரிக்கெட் போட்டி, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில்தான் இருநாடுகள் எதிர்த்து விளையாடின.

இந்நிலையில் இருநாடுகளிடையே கிரிக்கெட் போட்டி நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

முதல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும். இதில் இரு டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட், 2 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. 2023-ம் ஆண்டுவரை இருநாடுகள் இடையே மொத்தம் 6 கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவுள்ளன.

இதில் 14 டெஸ்ட், 30 ஒருநாள் கிரிக்கெட், 12 இருபது ஓவர் கிரிக்கெட் ஆகியவை நடைபெறவுள்ளன. இத்தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல்பாட்டு அதிகாரி சுபான் அகமது தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT