இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அதிக அளவில் விளையாட வைக்கப்படுகின்றனர், இந்தப் பணிச்சுமை அவர்களை பாதிக்கிறது என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.
யாதவ், ஷமி போன்ற வீச்சாளர்கள் சர்வதேச போட்டிகளுக்கு நல்ல உடல்தகுதியுடன் இருப்பதற்கான வழிவகை என்ன என்ற ரீதியில் பேசிய தோனி கூறியதாவது, “நமது அமைப்பில் உள்ள பிரச்சினையாகும் இது. சர்வதேச போட்டிகளிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்கள் திரும்பும் போது அவர்கள் சார்ந்த மாநில கிரிக்கெட் வாரியங்கள் இவர்களை உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க வலியுறுத்துகின்றன.
ஆனால், அப்படி அழைக்கும் போதும் அவர்கள் எவ்வளவு ஓவர் வீசுகிறார்கள் என்பதில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.
ஏதாவது ஒரு வேகப்பந்து வீச்சாளர் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட முடியவில்லை என்று கூறினால், உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் எரிச்சலடைந்து, 'இந்திய அணிக்கு ஆடுவதால், இப்போதெல்லாம் எங்களுக்கு ஆட மாட்டீர்களா? என்று நினைக்கின்றனர். எனவே பிரச்சினை இங்குதான் உள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் நலனை வைத்துப் பார்த்தோமானால், வேகப்பந்து வீச்சாளர்களின் முன்னேற்றத்தை மேற்பார்வையிட வேண்டும். அவர்கள் எவ்வளவு ஓவர்கள் வீசுகிறார்கள், அவர்களது பணிச்சுமை என்னவென்பதைப் பார்க்க வேண்டும் என்பதோடு அதிக உள்நாட்டு போட்டிகளில் விளையாடி சோர்வடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது” என்கிறார் தோனி.
தோனி கூறுவது சரிதானா? இது குறித்து ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ அசிஸ்டண்ட் எடிட்டர் சித்தார்த் மோங்கா தனது பத்தியில் எழுதியிருப்பதாவது:
தோனி கூறுவதற்கு எதிர்மறையாக உள்நாட்டு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறுவது என்னவெனில் உள்நாட்டு கிரிக்கெட்டிற்கு இந்திய அணியின் வீரர்கள் கிடைப்பது மிகவும் அரிது என்கின்றனர். மேலும், ஐபிஎல் தொடருக்கு முன் காயமடைந்து விடக்கூடாது என்று பீல்டிங்கில் டைவ் அடிப்பது போன்றவற்றைக் குறைத்துக் கொள்கின்றனர். காயமடைந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர் என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஓவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் வீசும் ஓவர்களை விட அதிகம் என்றே புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் தோனி, ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
2007-08 உள்நாட்டு சீசன் முடிந்த பிறகு முதல் தர கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக இஷாந்த் சர்மா வீசிய ஓவர்கள் 226.1. ஆனால் இதே காலக்கட்டத்தில் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்களில் இஷாந்த் சர்மா வீசிய ஓவர்களின் எண்ணிக்கை 247.5;
மொகமது ஷமி இந்திய அணியில் 2013-ல் அறிமுகமாகிறார். அதன் பிறகு அவர் தனது மாநில அணியான பெங்கால் அணிக்காக அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 83 ஓவர்களை வீசியுள்ளார். டெல்லி டேர் டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 53 ஓவர்களை வீசியுள்ளார்.
இந்திய அணிக்கு புவனேஷ் குமார் ஆடத் தொடங்கிய பிறகு அவரது மாநிலமான உத்திரப்பிரதேச அணிக்கு அவர் பந்து வீசவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தான் விளையாடிய ஐபிஎல் அணிகளுக்காக சுமார் 110 ஓவர்களை புவனேஷ் வீசியுள்ளார்.
இவ்வாறு அவர் தனது பத்தியில் மாற்று புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.