விளையாட்டு

கெயில் அதிரடி ஆட்டத்தையும் மீறி இலக்கை விரட்ட தடுமாறும் மே.இ.தீவுகள்

செய்திப்பிரிவு

நியூஸிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே வெலிங்டனில் நடைபெற்றுவரும் 4-வது காலிறுதி ஆட்டத்தில், 394 என்ற கடின இலக்கை விரட்டும் மே.இ.தீவுகள் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 17 பந்துகளில் 36 ரன்களுடன் கெயில் களத்தில் உள்ளார்.

இரண்டாவது ஓவரில் துவக்க வீரர் சார்லஸை இழந்த மே.இ.தீவுகள் அணி, 6-வது ஓவரில் சிம்மன்ஸை இழந்தது. சிக்ஸர் அடித்த அடுத்த பந்தில் சிம்மன்ஸ் ஆட்டமிழந்தார். கிறிஸ் கெயிலும் தனது வழக்கமான அதிரடியோடு ஆடினார்.

கெயிலுக்கு துணை நின்ற சாமுவேல்ஸும் தனது அதிரடியில் 14 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸரோடு 27 ரன்கள் சேர்த்தார். ஆனால் 10-வது ஓவரின் முதல் பந்தை, சாமுவேல்ஸ், டீப் பாய்ண்ட் பகுதியில் சிக்ஸருக்கு விரட்ட, அங்கே நின்றுகொண்டிருந்த டேனியல் வெட்டோரி, பவுண்டரி கோட்டுக்கு அருகே நின்று, ஒற்றைக் கையில் பந்தை அற்புதமாக எகிறிப் பிடித்து சாமுவேல்ஸை ஆட்டமிழக்கச்செய்தார்.

அதே ஓவரில் ராம்தின் ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தார். இன்னும் 40 ஓவர்களில் 314 ரன்கள் தேவையாயிருக்க, கெயிலின் அதிரடியை நம்பியே மே.இ.தீவுகளின் வெற்றி உள்ளது.

SCROLL FOR NEXT