விளையாட்டு

சீசனின் முதல் பட்டம்: மாட்ரிட்டில் களமிங்குகிறார் நடால்

செய்திப்பிரிவு

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நாளை தொடங்கும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் களமிறங்குகிறார் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஸ்பெயினின் ரஃபேல் நடால்.

இதன்மூலம் மாட்ரிட் ஓபனில் நடால் பங்கேற்பாரா, இல்லையா என கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த ஊகத்துக்கும், சந்தேகத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் பார்சிலோனா, மாட்ரிட், ரோம், பிரெஞ்சு ஓபன் உள்ளிட்ட முக்கியப் போட்டிகளில் வாகை சூடிய நடால், இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட சாம்பியன் பட்டம் வெல்ல வில்லை. 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கு சொந்தக்காரரான நடால், இந்த சீசனில் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் வாவ்ரிங்காவிடமும், பின்னர் நடைபெற்ற மான்டிகார்லோ மற்றும் பார்சிலோனா ஓபன் போட்டிகளில் சகநாட்டவர்களான டேவிட் ஃபெரர், அல்மாக்ரோ ஆகியோரிடமும் தோல்வி கண்டார். ஒரு பட்டம்கூட வெல்ல முடியாமல் போராடி வரும் நடால், மிகுந்த நம்பிக்கையோடு மாட்ரிட் ஓபனில் களமிறங்குகிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “சொந்த மண்ணில் விளையாடுவதால் மீண்டும் பார்முக்கு திரும்புவதோடு, மாட்ரிட் ஓபனில் 4-வது பட்டம் வெல்ல முடியும் என நினைக்கிறேன். ஸ்பெயின் எனது தாய்நாடு. இங்கு எந்தப் போட்டியில் விளையாடி னாலும் அது சிறப்புமிக்கதாக இருக்கும். இங்கு வரும் ரசிகர்கள் கூட்டம் போட்டியை பிரம்மாண்ட மானதாக்கிவிடும்” என்றார்.

சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நடால், மாட்ரிட் ஓபனில் காலிறுதிக்கு முன்னேறாமல் போனால், தற்போது 2-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதலிடத்தைப் பிடிப்பார்.

SCROLL FOR NEXT