பிரிஸ்பனில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் பிரிவு-பி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்ற மிஸ்பா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். அவரே மீண்டும் சிறப்பாக பேட் செய்து 73 ரன்களை எடுக்க கடைசியில் வஹாப் ரியாஸ் மிக முக்கியமான கட்டத்தில் 54 ரன்களை 46 பந்துகளில் விளாச பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை எட்டியது. இந்தத் தொடரில் பெரிய இலக்குகளை துரத்தி 270 ரன்களுக்கும் மேல் சர்வசாதாரணமாக எடுத்த அணி ஜிம்பாப்வே. அதனால் இன்றைய ஆட்டம் கொஞ்சம் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாகிஸ்தான் கேட்ச்களை விடாமல் பிடித்தது என்பது அந்த அணிக்கு ஒரு பெரிய ஆறுதல்.
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 49.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சிலும் வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த 7 அடி உயர மொகமது இர்பான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜிம்பாப்வேயை வீழ்த்த முடிந்தது.
ஆனால் ஜிம்பாப்வேயை எளிதில் பாகிஸ்தான் வீழ்த்தியதாக ஒரு போதும் கூற முடியாது, காரணம் இலக்கை விரட்டும்போது பல்வேறு தருணங்களில் பாகிஸ்தானை வீழ்த்தும் அச்சுறுத்தலை ஜிம்பாப்வே செய்தவண்ணமே இருந்தது. ஆனால், தொடர்ந்து பாகிஸ்தான் வீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றும் நோக்கத்துடன் வீசி அதில் வெற்றியும் கண்டதால் ஜிம்பாப்வேயின் அனுபவமின்மை பட்டவர்த்தனமானது.
பாகிஸ்தான் பந்துவீச்சின் கட்டுக்கோப்புக்கு உதாரணம் கூற வேண்டுமென்றால், விக்கெட் கீப்பர் உமர் அக்மல் 5 கேட்ச்களை பிடித்ததைக் கூற முடியும்.
இலக்கைத் துரத்திய போது சிபாபா, சிகந்தர் ரசா ஆகியோர் களமிறங்கினர். மொகமது இர்ஃபான் வீசிய லெந்த் மற்றும் அவரது பந்துகள் எழும்பிய உயரம் அனுபவமற்ற இவர்களுக்கு பெரும் தலைவலியை கொடுக்க அவர் 2 ஓவர்களில் 1 மெய்டன் 1 ரன் என்று அச்சுறுத்தலாக திகழ்ந்தார். 5-வது ஓவரில் 9 ரன்கள் எடுத்திருந்த சிபாபாவை எகிறிய பந்தில் வீழ்த்தினார் இர்ஃபான்.
அதே போல் ஆட்டத்தின் 7-வது ஓவரில் மீண்டும் சிகந்தர் ரசாவுக்கு ஒரு சற்றே எகிறிய பந்தை வீச அவரும் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 7 ஓவர்களில் 22/2.
அதன் பிறகும் இறுக்கமான பந்துவீச்சு தொடர 16-வது ஓவரில்தான் ஜிம்பாப்வே 50 ரன்களை எட்டியது. மசகாட்சாவும் டெய்லரும் இணைந்து ஸ்கோரை 74 ரன்களுக்கு உயர்த்திய போது மீண்டும் மொகமது இர்பான் பந்து வீச அழைக்கப்பட அவர் 29 ரன்களுடன் அபாயகரமாகச் சென்று கொண்டிருந்த மசகாட்சாவை வீழ்த்தினார். மசகாட்சா, இர்ஃபான் பந்தை மேலேறி வந்து விளாச நினைத்தது... சாரி கொஞ்சம் ஓவர்!
அதன் பிறகு பிரெண்டன் டெய்லர், சான் வில்லியம்ஸ் இணைந்து ஸ்கோரை கொஞ்சம் விரைவு படுத்த அடுத்த 8 ஓவர்களில் 50 ரன்கள் வந்த்து. சான் வில்லியம்ஸ் அபாய வீரர். டெய்லர் 72 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். அப்போது வஹாப் ரியாஸ் பந்தில் அக்மலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் இது ஒரு அதிர்ஷ்டவசமான விக்கெட்டே. லெக் திசையில் சென்ற பந்திலிருந்து அவர் விலகியிருந்தால் வைட் கிடைத்திருக்கும் ஆனால் அதனை சுலப பவுண்டரி அடிக்க நினைத்து லெக் திசை எட்ஜ் செய்ய அக்மல் கேட்ச் பிடித்தார்.
சான் வில்லியம்ஸ் 32 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த போது ரஹத் அலியின் எழும்பிய பந்தை நேராக ஷேஜாதிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இப்போது கிரெய்க் எர்வின் மட்டுமே ஜிம்பாப்வேயின் நம்பிக்கை நட்சத்திரம், ஆனால் இடையில் மிரே சற்றே எழும்பிய இர்ஃபான் பந்தை உமர் அக்மலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். எர்வின் கடும் நெருக்கடியில் ஆடி கடைசியில் 14 ரன்களில் வஹாப் ரியாஸிடம் வீழ்ந்தார்.
கடைசியில் சிகும்பரா அச்சுறுத்தினார் அவர் 35 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து வஹாப் ரியாஸின் 4-வது விக்கெட்டாக வீழ்ந்தார் ஜிம்பாப்வே 215 ரன்களுக்குச் சுருண்டது.
நம்பிக்கையளிக்காத பாக். பேட்டிங்:
பாகிஸ்தான் களமிறங்கியவுடனேயே நசீர் ஜாம்ஷெட், அகமது ஷேஜாத் விக்கெட்டுகளை 4 ரன்களில் இழந்தது. சதரா அபாரமாக வீசினார். பிறகு ஹாரிஸ் சோஹைல் 27 ரன்கள் எடுக்க ஸ்கோர் 58ஆக உயர்ந்தது. அவரும் ஒரு அலட்சியமான தருணத்தில் சிகந்தர் ரசாவிடம் அவுட் ஆனார். உமர் அக்மல், மிஸ்பா கூட்டணி 69 ரன்களை சுமார் 13 ஓவர்களில் சேர்த்தது. உமர் அக்மல் 33 ரன்களில் சான் வில்லியம்ஸ் பந்தில் பவுல்டு ஆனார். அருமையான பந்து அது.
சான் வில்லியம்ஸின் அதே ஓவரில் அஃப்ரீடிக்கு ஒரு பந்தை மிடில் அண்ட் ஆஃபில் பிட்ச் ஆக்கித் திருப்ப அஃப்ரீடி தடுத்தாட முயல பந்து போதிய அளவு திரும்பி மட்டையைக் கடந்து பவுல்டு ஆனது. அதிர்ச்சிகரமான பந்து, அதிர்ச்சிகரமான விக்கெட். 127/5 என்று ஆனது பாகிஸ்தான். மக்சூத் 21 ரன்கள் எடுத்தார்.
ஆட்ட நாயகன் வஹாப் ரியாஸ் களமிறங்கி 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை நின்று ஸ்கோரை 235 ரன்களுக்கு உயர்த்தினார்.
ஒருவழியாக முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்.