இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் உடல் தகுதியை நீண்ட காலத்துக்கு தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று மேற்கிந்தியத்தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் கோட்னி வால்ஷ் அறிவுரை கூறியுள்ளார்.
1980 மற்றும் 90-ம் ஆண்டுகளில் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் அதிகவேகபந்து வீச்சாளராக திகழ்ந்தவர் வால்ஸ். மும்பையில் நேற்று நடைபெற்ற இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சியில் வால்ஷ் பங்கேற்றார். அப்போது அவர் கூறியது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் உருவானார்கள்.
ஆனால் சுமார் ஓரிரு ஆண்டுகளிலேயே அவர்கள் காணாமல்போய்விட்டார்கள். அடிக்கடி காயமடைந்து, உடல் தகுதியை தக்கவைத்துக் கொள்ள முடியாமல்போனதுதான் இதற்கு முக்கியக் காரணம்.
உதாரணமாக இந்தியாவில் உமேஷ் யாதவ், ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார். அதன் பிறகு அவருக்கு காயம் ஏற்படத் தொடங்கி விட்டது. எனவேதான் வேகபந்து வீச்சாளர்கள் உடல் தகுதியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.
வேகபந்து வீச்சாளர்களுக்கு இப்படி அடிக்கடி காயம் ஏற்படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு, தாங்கள் பந்து வீச வேண்டிய அளவுக்கு ஏற்ப அவர்கள் உரிய பயிற்சிகளை மேற்கொள்ளாமல் களமிறங்குவதுதான் காயம் ஏற்படக் காரணம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
முன்பை விட இப்போது அதிக அளவு போட்டிகள் நடத்தப்படுகின்றன. எனவே வேகபந்து வீச்சாளர்கள் பயிற்சிக்கும், உடல் தகுதியை மேம்படுத்தவும் இரு மடங்கு நேரத்தை செலவிட வேண்டும். இந்த பிரச்சினை இந்திய வீர்களிடம் மட்டுமல்ல மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உள்ளது. 5 முதல் 6 டெஸ்ட் போட்டிகள் விளையாடி காயம் காரணமாக அவதிப்படுகிறார்கள். நம்மிடம் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று கூற முடியாது. அனைவரும் விளையாடும் உடல் தகுதியுடன் இல்லை என்றுதான் கூற வேண்டும் என்றார் வால்ஷ்.