2011 உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பிறகு களவியூகத்தில் மாற்றம் செய்யப்பட்ட புதிய விதிமுறைகளினால் யுவராஜ் சிங்கின் பந்துவீச்சு பாதிப்படைந்தது என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.
2011 உலகக்கோப்பைப் போட்டிகளில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தொடர் நாயகனாக பரிமளித்த யுவராஜ் சிங் போன்று நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ரெய்னாவின் பங்கு இருக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த தோனி இவ்வாறு கூறியுள்ளார்.
"யுவராஜ் ஒரு பயனுள்ள இடது கை சுழற்பந்து வீச்சாளர். 30 யார்டு சர்க்கிளுக்கு வெளியே 4 பீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதான புதிய விதிமுறைக்குப் பிறகு யுவராஜ் நிறைய ஓவர்கள் வீசவில்லை. விதிமுறை மாறிய பிறகு அவரது பந்துவீச்சு பாதிக்கப்பட்டது. ஆனாலும் டி20 கிரிக்கெட்டில் அவர் பந்துவீச முடியும்.
களவிதிமுறைகளில் மாற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக விரேந்திர சேவாக், சச்சின், யுவராஜ் ஆகியோர் நிறைய பந்துவீசுவார்கள். அப்போது அணி அவர்களது இந்தப் பங்களிப்பை நம்பியே பெரும்பாலும் இருந்தது என்று கூறலாம். ஆனாலும், இவர்கள் பகுதி நேர வீச்சாளர்களே, ஒரு நல்ல பேட்டிங் பிட்சில் இவர்கள் பந்துவீசுவது கடினம்.
ரெய்னா எப்படி பிட்சில் கொஞ்சம் உதவியிருந்தால் நன்றாக வீச முடியுமோ அப்படித்தான் அவர்களும். மேலும், ரெய்னா இடது கை பேட்ஸ்மென்களுக்கு நன்றாக வீசுகிறார். அயர்லாந்துக்கு எதிராக அவர் பயனளிப்பார் என்று நினைத்தேன், அவரும் நன்றாகவே வீசினார்.
ஷிகர் தவன், ரோஹித் சர்மாவும் பகுதி நேர வீச்சாளர்கள். பிட்சில் கொஞ்சம் அனுகூலம் இருந்தால் இவர்களையும் நான் பயன்படுத்த முடியும்.” என்றார் தோனி.