விளையாட்டு

11 வீரர்களையும் வட்டத்துக்குள் நிறுத்தலாமே: களவியூக விதிமுறைகள் மீது தோனி சாடல்

ஏபி

ஒருநாள் கிரிக்கெட்டில் 4 பீல்டர்களே வட்டத்துக்கு வெளியே நிறுத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையை தோனி கடுமையாகச் சாடியுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர்கள், பகுதி நேர பந்து வீச்சாளர்கள் ஆகியோரை பயன்படுத்த முடியாத இந்த விதிமுறையை தோனி நீண்ட காலமாகவே சாடி வருகிறார், தோல்வி ஏற்பட்டதனால் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

“இது என்னுடைய சொந்தக் கருத்துதான். இந்த விதிமுறையை அவர்கள் மாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு இரட்டைச் சதங்கள் அடிக்கப்பட்டுவிட்டது.

கூடுதல் பீல்டர் ஒருவர் வட்டத்துக்குள் இருப்பதன் மூலம் நிறைய ரன் இல்லாத பந்துகள் வீசப்படுகிறது என்று பலரும் கூறுகின்றனர். அது உண்மையெனில் 11 பீல்டர்களையும் வட்டத்துக்குள் நிறுத்தி ரன் இல்லாத பந்துகளை அதிகரிக்கலாமே.

ஒருநாள் கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போல் இருக்கக் கூடாது. இதிலும் வெறும் பவுண்டரிகளும், சிக்சர்களும் என்றால் ஆட்டம் சோர்வளிக்கவே செய்யும்.

ஒருநாள் கிரிக்கெட்டின் சாராம்சமே 15-வது ஓவரிலிருந்து 35வது ஓவர் வரை எப்படி பேட் செய்கிறோம் என்பதில்தான் அடங்கியுள்ளது. முதல் 10 ஓவர்களும் கடைசி 10 ஓவர்களும் டி20 கிரிக்கெட் போன்றதுதான். ஆனால், நடு ஓவர்களில் எப்படி பேட் செய்கிறோம் என்பதுதான் ஒருநாள் கிரிக்கெட்டின் சாராம்சம்.

தற்போதைய விதிமுறைகள் கொஞ்சம் ஒருதலைபட்சமானதுதான். ஸ்பின்னர்களுக்கு இந்த விதிமுறை கடுமையானது. தங்களது ஃபிளைட் மூலம் பேட்ஸ்மென்களை ஏமாற்றுபவர்கள் ஸ்பின்னர்கள். ஆனால் இப்போது ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்வீப் என்று சகஜமாக ஆடுகின்றனர். காரணம் இந்த புதிய களவியூக கட்டுப்பாடுகள் இவர்களுக்கு சவுகரியம் செய்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டையும் அதிரடிதான் தீர்மானிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீர்கள் என்றால், குறைந்தது கூடுதல் பீல்டரை உள்ளே கொண்டு வருவதா வெளியே கொண்டு செல்வதா என்பதை கேப்டன் தீர்மானிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.” என்று தோனி இந்தப் பிரச்சினைக்கு தீர்வையும் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT