இந்திய அணியின் சொத்து மொகமது ஷமி என்று பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத், இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக வீசி வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் மொகமது ஷமி அபாரம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆகிப் ஜாவேத் தற்போது யு.ஏ.இ. அணியின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் மொகமது ஷமி. 2011-இல் ஜாகீர் கான் செய்த பங்களிப்பு எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே போல் இந்த உலகக்கோப்பையில் ஷமி.
இது குறித்து ஆகிப் ஜாவேத் கூறும்போது, “இந்திய பவுலர்களில் என்னைப் பொறுத்தவரை மொகமது ஷமி சிறப்பாக வீசி வருகிறார். ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கான உட்பொருள் அனைத்தும் அவரிடம் உள்ளது. இந்திய அணியின் சொத்து மொகமது ஷமி.
மோஹித் சர்மாவின் பந்துவீச்சும் என்னைப் பெரிதும் கவர்ந்தது, எதிர்காலத்தில் இவரும் இந்திய அணியின் பந்துவீச்சு ஆயுதமாகத் திகழ்வார்.
ஆனால், மொகமது ஷமி ஏன் சிறந்தவர் எனில் அவர் நல்ல வேகத்துடன் வீசுகிறார். மேலும் அவர் சீராக வீசும் லெந்த். இரண்டும் அபாரம். பாகிஸ்தானுக்கு எதிராக ஷமியின் பந்துவீச்சு அபாரம்.
ஆஸ்திரேலியா பிட்ச்களில்தான் வேகப்பந்து வீச்சாளர் முதுகை வளைத்து பந்தின் தையலை நன்றாக தரையில் அடிக்க வேண்டிய தேவை உள்ளது. ஷமி இதனை சரியாகச் செய்கிறார். ஷமி இப்படியே வீசினால் நாக் அவுட் சுற்றுகளில் இந்தியாவை வெற்றி கொள்வது மிகக் கடினம்.
மோஹித் சர்மா, சிறந்த பேட்ஸ்மென்களை அதிர்ச்சியடையச் செய்யும் ஒரு விதமான பந்துவீச்சை தன் கைவசம் வைத்துள்ளார்.
தொலைவிலிருந்து பார்க்கும் போது அவர் அவ்வளவு வேகம் வீசுவது போல் தெரியவில்லை. ஆனால் கவனமாக இவரது பந்துவீச்சை ஆராய்ந்து பார்த்தால் திடீரென அவர் 5 கிமீ வேகம் கூட்டிவிடுகிறார். அதாவது 132-135 கிமீ வேகம் வீசிக் கொண்டிருப்பவர், திடீரென ஒரு பந்தை 140-இல் வீசுவது போல் அவர் வேகம் கூட்டுகிறார். இது சிறந்த பேட்ஸ்மென்களையும் சில சமயங்களில் நிலைகுலையச் செய்யும்.” இவ்வாறு கூறினார் ஆகிப் ஜாவேத்.