உலகக் கோப்பை கிரிக்கெட் பி - பிரிவு லீக் ஆட்டத்தில், அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு சமி, அஸ்வின் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சும், தவண், ரோஹித், கோலி, ரஹானா ஆகியோரின் அபார பேட்டிங்கும் துணைபுரிந்தன.
இந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா சமன் செய்தது. அதேவேளையில், இந்தியா ஏற்கெனவே செய்த சாதனை முறியடிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டம் முதல் இந்த உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டம் வரை தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பதிவு செய்து, தனது முந்தைய சாதனையை (2003-ல் கங்குலி தலைமையிலான அணி 8 வெற்றி) சமன் செய்தது.
இந்த நிலையில், தோனி தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று, உலகக் கோப்பையில் புதிய வரலாறு படைத்தது.
அதேவேளையில், கிளைவ் லாய்டு தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பெற்று செய்த சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இந்த வகை சாதனையில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியான 24 உலகக் கோப்பை வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது.
இந்த உலகக் கோப்பையில் விளையாடிய முதல் 5 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, முந்தைய போட்டியின் வெற்றியின்போதே காலிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடப்பு உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 5 எதிரணிகளை ஆல் அவுட் செய்து இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.
அயர்லாந்துக்கு நெருக்குதல்:
அதேவேளையில், இன்றைய ஆட்டத்தில் தோல்வியுற்றதால், இதுவரை 3 வெற்றிகளைப் பெற்றுள்ள அயர்லாந்து அணி தனது கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை வெல்ல வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தவண் - ரோஹித் அபார ஆட்டம்
இப்போட்டியில், 260 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி, 36.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் சேர்ந்த இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் என்ற சிறப்பை, ரோஹித் சர்மாவும் ஷிகர் தவணும் பெற்றனர். இந்த இணை 174 ரன்கள் குவித்து, 1999-ல் கென்யாவுக்கு எதிராக ஜடேஜா - சச்சின் இணை நிகழ்த்திய 163 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தது.
ஆட்டத்தின் 26.5-வது ஓவரில் தவண் தனது சதத்தை பூர்த்தி செய்தார். 84 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். இது நடப்பு உலகக் கோப்பையில் இவர் அடித்த இரண்டாவது சதமாகும். பின்னர், 27.4-வது ஓவரில் தாம்சம் பந்துவீச்சில் போர்ட்டர்ஃபீல்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் தவண். 85 பந்துகளில் 100 ரன்கள் என்ற நிலையில் அவர் பெவிலியன் திரும்பினார்.
முன்னதாக, 23.2 ஓவரில் தாம்சன் வீசிய பந்தில் ரோஹித் சர்மா பவுல்ட் ஆனார். அவர் 66 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்திருந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கோலி - ரஹானே இணை மிகச் சிறப்பாக பேட் செய்து அணியை வெற்றிக்கு எளிதாக அழைத்துச் சென்றனர். விராட் கோலி ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 40 ரன்களும், ரஹானே 28 பந்துகளில் 39 ரன்களும் சேர்த்தனர்.
அயர்லாந்து இன்னிங்ஸ்:
ஹாமில்டனில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அற்புதமான துவக்கத்துடனும், மோசமான கடைசி நேர ஆட்டத்தாலும் அந்த அணியால் 260 என்ற வெற்றி இலக்கையே நிர்ணயிக்க முடிந்தது.
எனினும், இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த அணி அயர்லாந்துதான் என்பது கவனிக்கத்தக்கது.
அதேபோல், இதுவரை மோதிய எதிரணிகள் அனைத்தையும் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆல் அவுட் ஆக்கியுள்ளார்கள் என்பது மற்றொரு சிறப்பு.
சீராக ரன் சேர்த்து வந்த அயர்லாந்து, துவக்க வீரர்களால் விக்கெட் இழப்பின்றி 10 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்தது. 15-வது ஓவரில், அஸ்வினின் சுழலில் துவக்க வீரர் ஸ்டிர்லிங் 42 ரன்களுக்கு வீழ்ந்தார்.
அடுத்த சில ஓவர்களில் ரெய்னாவிடம் ஜாய்ஸ் 2 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இந்த விக்கெட்டை அடுத்து, அயர்லாந்து ரன் சேர்க்கும் வேகத்தைக் குறைத்தது.
போர்டர்ஃபீல்ட் - நியால் ஓ ப்ரெய்ன் பார்ட்னர்ஷிப்பில் 53 ரன்கள் சேர்த்த நிலையில், 32-வது ஓவரில் போர்டர்ஃபீல்ட் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகும், 38 ஓவர்கள் வரை சிறப்பாகவே ஆடி வந்த அயர்லாந்து அணி, ஒரு ஓவருக்கு சராசரியாக 5 ரன்களுக்கு குறையாமல் சேர்த்து வந்தது.
38 ஓவர்களில் 194 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நிலையில், இந்த உலகக் கோப்பையில் முதன் முறையாக ஒரு அணி இந்தியாவுக்கு எதிராக 50 ஓவர்கள் முழுவதுமாக ஆடி முடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 39-வது ஓவரின் கடைசி பந்தில் பால்பர்னியை அஸ்வின் வெளியேற்றினார். அவர் 24 ரன்கள் சேர்த்திருந்தார்.
தொடர்ந்து அடுத்த ஓவரில் கெவின் ஓ ப்ரெய்ன் 1 ரன்னுக்கு சமியின் வேகத்தில் வீழ்ந்தார். இதையடுத்து வில்சன், நியால் ஓ ப்ரெய்ன், தாம்ப்ஸன் என ஆட்டமிழக்க, இறுதியில் அயர்லாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 259 ரன்களைச் சேர்த்தது.
இந்தியத் தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உமேஷ் யாத்வ், மோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.