உலகக்கோப்பையில் முதல் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் வரலாறு படைக்கக் காரணமாயிருந்த சமியுல்லா ஷென்வாரி அடுத்ததாக ஆஸி. அணியை வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்து அணியை இன்று வீழ்த்திய ஆப்கன் அணியில் ஷென்வாரி 96 ரன்களை விளாசினார். அவர் அடுத்தடுத்து வெற்றி பெறவே அணியினரிடத்தில் ஆவல் மிகுந்துள்ளது என்று கூறுகிறார்.
அகதிகள் முகாமில் இருந்த போது கிரிக்கெட் கற்றுக் கொண்ட ஷென்வாரி கூறியதாவது: “முன்பு ஒன்றுமேயில்லாமல் இருந்தது. ஆப்கானிஸ்தானில் 8 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தோமானால் ஒன்றுமேயில்லை.
ஆனால் தற்போது தெருக்களில், பள்ளிகளில், எங்கு சென்றாலும் ஆப்கனில் கிரிக்கெட்.. கிரிக்கெட் என்று கொடிகட்டிப் பறக்கிறது.
வரும் ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையும், வெறியும் எங்கள் அணியிடத்தில் இந்த வெற்றி ஏற்படுத்தியிருக்கிறது.
அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவை பெர்த்தில் சந்திக்கிறோம். ஆஸ்திரேலியாவுக்கு கடினமான நேரத்தை அளிப்போம், அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டோம் என்று நம்புகிறேன். அந்தப் போட்டியை ஆவலுடன் அனைவரும் எதிர்பார்க்கிறோம், வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்.” என்றார் ஷென்வாரி.
இன்னும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய பெரிய அணிகளுடன் ஆப்கன் அணி மோதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.