விளையாட்டு

வெற்றி நினைவுச் சின்னமாக ஸ்டம்ப்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை

பிடிஐ

வெற்றிபெற்றவுடன் அணி வீர்ர்கள் ஸ்டம்பை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்வது வழக்கம். குறிப்பாக இந்திய கேப்டன் தோனிக்கு இது ஒரு வெற்றி நினைவுச்சின்ன சேகரிப்புப் பழக்கம்.

ஆனால் கடந்த ஞாயிறன்று பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு தோனி பைல் ஒன்றை நினைவுச் சின்னமாக பாதுகாக்க எடுத்தார்.

உடனே நடுவர் இயன் கோல்ட், தோனியிடம் ஒரு சில வார்த்தைகளைப் பேச பைல் மீண்டும் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தது.

இதற்கு குறிப்பிடத்தகுந்த காரணங்கள் உள்ளன. இப்போது கிரிக்கெட் ஆட்டங்களில் பயன்படுத்தப்படும் ஸ்டம்ப்கள் எல்.இ.டி. ஹை-டெக் ஸ்டம்ப்கள். இதன் விலை சுமார் ரூ.24 லட்சம் என்று கூறப்படுகிறது. 2 பைல்களின் விலை சுமார் ரூ.50,000 ஆகும்.

எனவே வெற்றியின் நினைவாக ஸ்டம்ப்களையோ, அல்லது பைல்களையோ எடுத்துச் செல்ல ஐசிசி-யிடமிருந்து சிறப்பு அனுமதி பெறவேண்டும்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ‘பிக்-பாஷ்’ இருபது ஓவர் லீக் போட்டிகளில் முதன் முதலாக இந்த ஹை-டெக் ஸ்டம்ப்கள் 2013-ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டிகளில் பரிசோதனை முயற்சியாக இவ்வகை ஸ்டம்ப்கள் பயன்படுத்தப்பட்டன.

இவ்வகை எல்.இ.டி. ஸ்டம்ப்களை உருவாக்கிய எக்கர்மான் வங்கதேசத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளின் போது பிடிஐ செய்தி நிறுவனந்த்திடம் கூறும் போது, "இந்த ஒட்டுமொத்த அமைப்புக்கும் அதிகம் செலவாகியுள்ளது. ஒரு போட்டிக்கு இதனை வைத்துப் பராமரிக்க ஆகும் செலவு சுமார் ரூ.25 லட்சமாக இருக்கும். எனவேதான் எந்த வித வெற்றிக் கொண்டாட்டத்தின் போதும் ஸ்டம்ப்களை பெயர்த்து எடுக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறினேன்.” என்றார்.

SCROLL FOR NEXT