மெல்போர்னில் நாளை நடைபெறும் பரபரப்பான இந்திய - தென் ஆப்பிரிக்க உலகக்கோப்பை போட்டி இந்திய பேட்டிங்கிற்கும், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்குமான போட்டியாக இருக்கும் என்று துணைக் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
"இரு அணிகளுமே சமபலத்துடன் திகழ்கின்றன. அந்த குறிப்பிட்ட நாளில் எந்த அணி எப்படி விளையாடுகிறது என்பதைப் பொறுத்து முடிவுகள் தீர்மானிக்கப்படும். அவர்களிடம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், நம்மிடையே பேட்டிங் பலம் உள்ளது. எனவே அவர்கள் பந்துவீச்சுக்கும் நமது பேட்டிங்கிற்கும் இடையிலான போட்டியாக நாளை விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
மிகப்பெரிய பவுண்டரிகள் என்பதால் கடைசி ஓவர்களில் ரன் விகிதத்தைக் கூட்டுவது சற்று கடினம். எனவே திட்டமிட்ட அணுகுமுறையே பேட்டிங்கில் கைகொடுக்கும்.
முழு ஸ்டேடியமும் ரசிகர்களால் நிரம்பி வழியும்போது ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் முன்னிலையில் நன்றாக ஆடுவது பெரிய திருப்தியை அளிக்கும். எப்போதும் வெற்றியடைவோம் என்று கூற முடியாது, ஆனால் நன்றாக ஆடினால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்.
நாளைய போட்டியில் வெற்றி பெறுவது மிகப்பெரிய அளவிலான தன்னம்பிக்கையை அளிக்கும். அதாவது நல்ல அணியை வீழ்த்தினோம் என்பது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும். இந்தத் தடையைக் கடந்துவிட்டால் பிறகு வரும் பெரிய போட்டிகளில் உத்வேகம் கூடுதலாக இருக்கும்.
ஆனால் பெரிதாக கணிப்பவன் அல்ல. ஒரு சமயத்தில் ஒரு போட்டியில் கவனம் செலுத்துபவன் நான். ஒரு அணியாக நன்றாக ஆடவேண்டும். யாருக்கும் எதையும் நிரூபிப்பதற்காக அல்ல.”
இவ்வாறு கூறினார் கோலி. வழக்கமாக போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கலந்து கொள்வார். ஆனால் இன்று விராட் கோலி கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.