லிங்கனில் நடைபெற்ற உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கைக்கு அதிர்ச்சி அளித்தது ஜிம்பாப்வே.
முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 279 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே மசகாட்சா (117 நாட் அவுட்), பிரெண்டன் டெய்லர் (63), எஸ்.சி.வில்லியம்ஸ் (51 நாட் அவுட்) ஆகியோரது அபார ஆட்டத்தினால் 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் அச்சுறுத்தும் யார்க்கர்கள் கொண்ட மலிங்கா, அயல்நாடுகளில் சிறந்த ஸ்பின்னரான ரங்கன்னா ஹெராத், அனுவமிக்க குலசேகரா ஆகியோர் இருந்தும் ஜிம்பாப்வே வெற்றியைத் தடுக்க முடியவில்லை. மலிங்கா 7 ஓவர்களில் 46 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட்டுகள் எதையும் கைப்பற்றவில்லை.
இலங்கை அணியில் தில்ஷன், ஆஞ்சேலோ மேத்யூஸ் பேட்டிங்கில் களமிறங்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், இலங்கை பந்துவீச்சில் எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்பதே அந்த அணிக்கு கவலையளிக்கும் விஷயமாகும்.
ஜிம்பாப்வே தொடக்க வீரர்க்ள் சிபாபா (22), சிகந்தர் ரஸா (7) ஆகியோர் 7 ஓவர்களுக்குள் வெளியேற ஸ்கோர் 35/2 என்ற போது பிரெண்டன் டெய்லர் மற்றும் மசகாட்சா இணைந்தனர். இவர்கள் 21 ஓவர்களில் 127 ரன்களைச் சேர்த்தது இலங்கையிடமிருந்து ஆட்டத்தைப் பறித்தது.
டெய்லர் 6 பவுண்டரிகளுடன் 68 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். 28-வது ஓவரில் டெய்லர், தில்ஷன் பந்தை பிளிக் செய்து ஆட்டமிழக்க, சான் வில்லியம்ஸ், மசகாட்சாவுடன் இணைந்தார். இவரும் நல்ல வேகத்தில் ரன்களைக் குவித்து பவர் பிளேயில் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தினர்.
மசகாட்ஸா 103 பந்துகளில் சதம் கண்டார். ஹெராத் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டிவிட்டு அவர் சதம் கண்டார். சான் வில்லியம்ஸ் 46 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இவர்தான் வெற்றிக்கான ஷாட்டை அடித்த்தார். மசகாட்சா, 119 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 117 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணியில் கருணரத்ன (58), ஜீவன் மெண்டிஸ் (51) ஆகியோர் அரைசதம் எடுக்க திரிமன்ன, ஜெயவர்தனே ஆகியோர் தலா 30 ரன்களை எடுக்க சங்கக்காரா 8 ரன்களில் பன்யங்காராவிடம் அவுட் ஆனார். 85/3 என்ற நிலையிலிருந்து இலங்கை 279 ரன்களை எட்டியது.
பேட்டிங்கில் பிற்பாடு அரைசதம் கண்ட சான் வில்லியம்ஸ், பந்துவீச்சிலும் 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஜிம்பாப்வே, இந்தியாவுடன் பிரிவு-பி-யில் உள்ளது குறிப்பிடத்தக்கது.