விளையாட்டு

உலகக்கோப்பை: அதிரடி பேட்களுக்கு வருகிறது கட்டுப்பாடு

ஐஏஎன்எஸ்

உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் பயன்படுத்தப்படும் மட்டைகளுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வர ஐசிசி பரிசீலனை செய்து வருகிறது.

நவீன விதிமுறைகளின்படி, ஆட்டம் ஒரேயடியாக பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாகி, பவுலர்களை கோமாளியாக்கி வருகிறது என்ற விமர்சனங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

இதுபற்றி ஐசிசி தலைமை அதிகாரியும் முன்னாள் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பருமான டேவ் ரிச்சர்ட்ஸன் கூறும்போது, “பிரமாதமான ஷாட்களை ஆடிவரும் டீவிலியர்ஸ், குமார் சங்கக்காரா, பிரெண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட வீர்ர்கள் மீது யாருக்கும் எந்த வித மனத்தாங்கலும் இல்லை. இது போன்ற வீரர்கள் அசாதாரணத் திறமை உடையவர்கள் இவர்கள் சிக்சர்கள் அடித்தால் அனைவரும் பார்த்து ரசிக்கின்றனர் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

ஆனால், சில பேட்ஸ்மென்கள் ஆடும் மிஸ் ஹிட்களே எல்லைக்கோட்டுக்கு மேலே சிக்சர் ஆகிவிடுகிறது. நியாயமாகப் பார்த்தால் அது பவுண்டரி அருகே கேட்ச் ஆகவேண்டும். ஆனால் மிஸ் ஹிட்களும் சிக்சர்களுக்கு செல்கின்றன. இதுதான் நியாயமற்றது என்று கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த நலம் விரும்பிகள் கருதுகின்றனர்.

எனவே, எம்.சி.சி. (உலக கிரிக்கெட் கமிட்டி), விதிமுறை இயற்றுபவர்கள், மற்றும் ஐசிசி ஆகியோர் இணைந்து மட்டையின் அகலத்திற்கு கட்டுப்பாடு கொண்டு வர பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்றார்.

ஆனால், இது மட்டைத் தயாரிப்பு நிறுவனங்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது:

மைதானங்கள் சிறியதாக இருப்பதால் டாப் எட்ஜ் கூட சிக்ஸ் ஆகிறது, இதற்கு மட்டையைக் காரணமாகக் கூறுவது சரியாகப்படவில்லை. ஒருநாள் கிரிக்கெட் மட்டுமல்ல கிரிக்கெட் ஆட்டமே கடும் மாற்றமடைந்துள்ளது.

பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்றால், அதற்கு நிறைய காரணிகள் உள்ளன. வெறும் மட்டையின் அகலம் மட்டுமே எப்படி காரணமாக முடியும்? என்று முன்னணி பேட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் பிராண்ட் மேலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT