உலகக்கோப்பை கிரிக்கெட் பிரிவு ஏ ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை நம்ப முடியாத நிலையிலிருந்து வெற்றி பெற்று வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் மொகமட் நபி முதலில் ஸ்காட்லாந்தை பேட் செய்ய அழைத்தார். ஷபூர், தவ்லத் சத்ரான்களின் அபாரமான, ஆக்ரோஷமான பந்துவீச்சுக்கு ஸ்காட்லாந்து 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் சத்ரான் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், தவ்லத் சத்ரான் 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆப்கானிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 211 எடுத்து வெற்றி பெற்றது.
42/0 என்று அபாரமாகத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அதன் பிறகு வரிசையாக விக்கெட்டுகளை இழந்து 97/7 என்று 23.4 ஓவர்களில் தோல்வி முகம் காட்டியது. அதன் பிறகு 35 ரன்கள் 8-வது விக்கெட்டுக்குச் சேர்க்கப்பட்டது. 132/8 என்று ஆப்கானிஸ்தான் 35-வது ஓவர் முடிவில் தடுமாறியது, ஸ்காட்லாந்து வெற்றி நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் ஏற்கெனவே நன்றாக ஆடத் தொடங்கியிருந்த சமியுல்லா ஷென்வாரி 7 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 147 பந்துகளில் 96 ரன்களை விளாச ஸ்கோர் 192 ரன்களுக்கு உயர்ந்தது.
ஆனால் அப்போது ஷென்வாரி ஆட்டமிழந்தார். 3 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ஆப்கான் 192/9 என்று ஆட்டம் பரபரப்பானது. ஷென்வாரி அவுட் ஆன அதே ஓவரில் 3 சிக்சர்களை விளாசினார். 19 ரன்களே வெற்றிக்கு உள்ள நிலையில் ஆட்டமிழந்த அவர் மிகுந்த வருத்தமடைந்தார்.
ஷபூர் சத்ரான், ஹமித் ஹசன் கையில் ஆட்டம் சென்றது. 48-வது ஓவரில் 5 ரன்கள் வந்தது. 49-வது ஓவரில் கடைசி பந்து வரை 4 ரன்கள்தான் வந்தது. ஆனால் பெரிங்டன் வீசிய கடைசி பந்து மெதுவான ஷாட் பிட்ச் பந்தாக அதனை இடது கை வீரர் ஷபூர் சத்ரான் அழகாக, சாதுரியமாக, புத்திசாலித்தனமாக சற்றே உள்ளே நகர்ந்து காலிப்பிரதேசமான ஃபைன்லெக்கில் புல் ஆடி பவுண்டரி அடித்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை. வார்ட்லா வீச முதல் யார்க்கர் பந்தை ஹமித் சிங்கிள் எடுக்க, 3-வது பந்து தாழ்வான புல்டாஸாக அமைய ஷபூர் சத்ரான் அதனை பவுண்டரி விளாசினார். ஆப்கான் ரசிகர்கள், வீரர்கள் குஷியின் உச்சத்திற்குச் செல்ல, ஸ்காட்லாந்து வீரர்களின் தலைகள் தாழ்ந்தன. அவர்கள் நிச்சயம் வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டதில் மனம் உடைந்திருப்பார்கள்.
ஆப்கான் பேட்டிங்கை பார்த்தோமானால் 42/1, 85/2, அதன் பிறகு 97/7. 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் என்ற வேகத்தில் சரிவு, கடைசியில் 132/9 பிறகு 211/9. வெற்றி. இந்த வெற்றியின் மூலம் இந்தப் பிரிவில் இங்கிலாந்து, இலங்கையைக் காட்டிலும் ரன்விகிதத்தில் ஆப்கன் முன்னிலை வகிக்கிறது.
முதல் உலகக்கோப்பை போட்டியில் ஆப்கன் முதல் வெற்றியைப் பெற்று வரலாறு படைத்தது.