கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை நியூசிலாந்து அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பிரண்டன் மெக்கல்லம் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 44.2 ஓவர்களில் 197 ரன்களுக்கு சுருண்டு 134 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.
தென் ஆப்பிரிக்க அணியில் ஏ.பி.டிவிலியர்ஸ் இருந்தும் அந்த அணி தோல்வியடைந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சீராக ஆடிவரும் ஆம்லாவுக்கு இன்று ஓய்வு அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
டேல் ஸ்டெய்ன் இல்லாத பந்துவீச்சு வரிசையில் வெர்னன் பிலாண்டர், மோர்னி மோர்கெல் சோபிக்கவில்லை, இன்னும் சொல்லப்போனால் தென் ஆப்பிரிக்காவின் பவுலிங், அந்த அணியின் பந்துவீச்சு போல் இல்லை. பிலாண்டர் 8 ஓவர்களில் 59 ரன்கள் விட்டுக் கொடுத்தார். கைல் அபாட், டுமினி ஆகியோரே சிக்கனம் காட்டினர்.
நியூசிலாந்து அணியில் மெக்கல்லம், கேன் வில்லியம்சன், அரைசதம் எடுக்க ராஸ் டெய்லர் 41 ரன்களையும், நேதன் மெக்கல்லம் 33 ரன்களயும் எடுத்து பங்களிப்பு செய்தனர்.
நியூசிலாந்து அணி தனது உலகக்கோப்பை அணியை அப்படியே களமிறக்கியது, கடைசி வரை பேட்டிங் செய்தனர். டிம் சவுதீயைத் தவிர அனைத்து வீரர்களும் 20 ரன்களைக் கடந்தனர். கடைசி 11 ஓவர்களில் 80 ரன்களுக்கும் மேல் விளாசப்பட்டது. நியூசிலாந்து 331/8 என்று அபார பேட்டிங்கை நிறைவு செய்தது.
இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்க அணி டாப் வீரர்களை இழந்து 14-வது ஓவரில் 62/6 என்று ஆனது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட்டின் வேகம் மற்றும் ஸ்விங், டிம் சவுதீயின் துல்லியம், டேனியல் வெட்டோரியின் ஸ்பின் ஆகியவற்றுக்கு தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகள் சரிந்தன. டிவிலியர்ஸ் 24 ரன்கள் எடுத்து வெட்டோரி பந்தில் மிட் ஆஃபில் மெக்கல்லத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
62/6 என்ற நிலையிலிருந்து டுமினி (80 ரன்கள், 98 பந்துகள்), வெர்னன் பிலாண்டர் (57 ரன்கள், 84 பந்துகள்) 121 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் போல்ட் பந்தில் டுமினி பவுல்டு ஆனார். அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா 45-வது ஓவரில் 197 ரன்களுக்குச் சுருண்டது.
டிரெண்ட் போல்ட் 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், வெட்டோரி 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், மெக்லினாகன் 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர்.